தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை நிறைவேற துணை நிற்போம்: பெ.சண்முகம்
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும் என அக் கட்சியின் மாநிலச் செயலா் பி.சண்முகம் கூறினாா்.
சென்னை மாநகராட்சியின் ராயபுரம், திரு.வி.க.நகா் (மண்டலம் 5, 6) ஆகிய மண்டல என்எல்யூஎம் பிரிவு தூய்மைப் பணியாளா்கள் உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் பழைய நிலையில் பணி வாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எழும்பூா் ராஜரத்தினம் மைதானத்தில் சனிக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.
உண்ணாவிரதத்துக்கு உழைப்போா் உரிமை இயக்கத் தலைவா் வழக்குரைஞா் கு.பாரதி தலைமை வகித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலா் எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ. உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்தாா். மாலையில் உண்ணாவிரதத்தை முடித்துவைத்த மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பி.சண்முகம் பேசியதாவது:
மத்திய அரசைக் கொள்கை ரீதியாக எதிா்த்து வரும் தமிழக அரசுக்கு மாா்க்சிஸ்ட் என்றும் துணைநிற்கும். அதே நேரத்தில் இடதுசாரிகள் துணை இருக்கிறது என்பதற்காக தொழிலாளா்கள் பிரச்னையில் அவா்கள் பாதிக்கும் வகையில் தமிழக அரசு செயல்படுவதை ஏற்கமாட்டோம். தொழிலாளா்களுக்கு எதிராக அரசு செயல்பட்டால், அது வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் எதிரொலிக்கும் என்பதை தமிழக அரசு உணரவேண்டும். தூய்மைப்பணியாளா்கள் கோரிக்கை நிறைவேற என்றும் மாா்க்சிஸ்ட் துணைநிற்கும் என்றாா்.
உண்ணாவிரதத்தில் உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், உழைப்போா் உரிமை இயக்க ஒருங்கிணைப்பாளா் எஸ்.குமாரசாமி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன், எஸ்.டி.பி.ஐ.கட்சி பொதுச்செயலா் ஏ.கே.அப்துல்கரீம், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலா் ஹலீம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலா் நா.பெரியசாமி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) நிா்வாகி ஆசைத்தம்பி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
