சுடச்சுட

  

  "பசுமை வீடு திட்டம் முறையாக ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை

  By காஞ்சிபுரம்,  |   Published on : 02nd July 2013 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வீடு திட்டம் முறையாக கிடைப்பதில்லை என்று மாவட்ட திட்டக்குழுக் கூட்டத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டினர்.

  காஞ்சிபுரம் மாவட்டத் திட்டக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடந்தது. மாவட்டத் திட்டக்குழுத் தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் முன்னிலை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி. சோமசுந்தரம், வாலாஜாபாத் பா. கணேசன், மொளச்சூர் இரா. பெருமாள், காஞ்சிபுரம் நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் சுப்பிரமணியன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள், மாவட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்துத்துறை அரசு அதிகாரிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

  இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் வி. சோமசுந்தரம் பேசியது: ஒன்றியம் மற்றும் நகரப் பகுதிகளில் 5 கி.மீ. தூரம் சென்றுதான் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டிய நிலை மக்களுக்கு உள்ளது. எனவே மக்கள் வசதிக்காக ஒன்றரை கி.மீ. தூரத்துக்குள் ரேஷன் கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்குள்பட்ட பல கிராம சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைக்குள்பட்ட முசரவாக்கம் - கிளார் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. கலியனூர், வையாவூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மிகவும் மோசமாக குடிக்க தகுந்த நிலையில் இல்லை. எனவே இப்பகுதிகளுக்கு பாலாற்றில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

   வாலாஜாபாத் ஒன்றியக்குழுத் தலைவர் தென்னேரி வரதராஜுலு: காஞ்சிபுரம் நகராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதே போல் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஊராட்சிக்குள்பட்ட கிராம சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதை சீரமைக்க வேண்டும்.

  ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக்குழுத் தலைவர் வெங்கடேசன்: ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சிக்குள்பட்ட 58 ஊராட்சிகளிலும் பகுதிகளிலும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது.

  காட்டாங்கொளத்தூர் ஒன்றியக்குழுத் தலைவர் சம்பத்குமார்: சென்னைக்கு மிக அருகில் உள்ளது காட்டாங்கொளத்தூர் ஒன்றியம். ஆனால் இந்த ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் பஸ் இயக்க முடியாத சூழல் உள்ளது. தமிழக முதல்வரின் பசுமை வீடுத் திட்டத்தில் முறையான ஒதுக்கீடு இல்லை. இதனால் ஒன்றியத்துக்குள் யாருக்கும் என்னால் பதில் சொல்லமுடியவில்லை. இதேபோல்தான் இந்திரா குடியிருப்புத் திட்டத்திலும் ஒதுக்கீடு இல்லை.

   மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் முத்துவேல்: பசுமை வீட்டுத்திட்டம் முறையாக ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களுக்கென தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும். பொறுப்புக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதிக வாக்கு வித்தியாசத்தில் மக்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளனர். அந்த மக்களுக்கு பசுமை வீடு திட்டம் சரிவர ஒதுக்காததால், அவர்களிடம் பதில் பேசமுடியவில்லை. திட்டம் குறித்து இனி எதுவும் பேசக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் கூறிவிட்டால், இனி அது குறித்து பேசாமல் இருந்துவிடுகிறேன் என்று விரக்தியில் பேசினார்.

   மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன்: அனைத்து ஒன்றிய, ஊராட்சி தலைவர்கள் குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பொதுமக்கள் சாலைக்கு வந்து போராடும் சூழ்நிலை வரக்கூடாது. எந்தந்த பகுதியில் பிரச்னை உள்ளது என்று தகவல் தெரிவித்தால், போர்கால நடவடிக்கை எடுக்கப்படும்.

   சாலைகளைப் பொறுத்தவரை, எந்தெந்த பகுதிகளில் சாலை சரியில்லை என்பது குறித்து ஜூலை 31-ம் தேதிக்குள் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் எழுத்துபூர்வமாக வழங்கலாம். அதற்கான நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும். பசுமை வீட்டுத் திட்டத்தின் படி தமிழக அரசு எவ்வளவு ஒதுக்கீடு செய்கிறதோ, அதை நாம் செயல்படுத்தி வருகிறோம். இதே போல் இந்திரா குடியிருப்புத் திட்டமும்தான். பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்த முடியவில்லை என்று திருப்பி அனுப்பப்பட்ட இந்திரா குடியிருப்புத் திட்டத்தை நாம் கேட்டுப் பெற்றுள்ளோம். இதன் மூலம் கூடுதலாக 4,500 வீடுகள் ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டது. அதில் 1,600 வீடுகள் ஒதுக்க அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. 2011- 2012, 2012 - 2013-ஆம் காலக்கட்டங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பசுமை வீட்டுத் திட்டங்களே இன்னும் முழுமையடையவில்லை. அதை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஆட்சியர் லி. சித்ரசேனன்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai