Enable Javscript for better performance
ஐயம்பேட்டையில் கழிவுநீரில் குடிநீர் கலப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஐயம்பேட்டையில் கழிவுநீரில் குடிநீர் கலப்பு

    By காஞ்சிபுரம்,  |   Published on : 03rd July 2013 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஐயம்பேட்டையில் கழிவுநீர் குழாயை சரி செய்தபோது குடிநீர் குழாய்  உடைந்து கழிவுநீரில் கலந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது.

    காஞ்சிபுரத்தை அடுத்த வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது ஐயம்பேட்டை ஊராட்சி. ஊராட்சியில் சாயப்பட்டறை பிரச்னை, கழிவுநீர் கால்வாய் பிரச்னை, குடிநீர் பிரச்னை, சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன.

    இது குறித்து பொதுமக்கள் பல்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

    ஐயம்பேட்டை மேலவீதி பகுதிகளுக்குச் செல்லும் குடிநீர் பைப்லைன், அந்தப் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வழியாக செல்கிறது.

    இதன் அருகிலேயே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பைப்லைனும் செல்கிறது.

    கடந்த 2 தினங்களுக்கு முன்பு பள்ளியில் இருந்து செல்லும் கழிவுநீர் பைப்லைனில் அடைப்பு ஏற்பட்டது.

    இதை சரி செய்யும் பணியில் திங்கள்கிழமை ஊராட்சிப் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதற்காக பள்ளம் தோண்டிய போது கழிவுநீர் பைப்பும், குடிநீர் பைப்பும் உடைப்பு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து ஊழியர்கள் அப்பணியை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். இதனால் குடிநீரில், கழிவுநீர் கலந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது. செவ்வாய்க்கிழமை மாலை வரை இதை சரி செய்யும் பணியில் ஊராட்சி நிர்வாகம் செய்யவில்லை.கழிவுநீர் பைப்லைனில் உள்ள அடைப்பை சரி செய்ய தோண்டப்பட்ட பள்ளத்தில் நீர் தேங்கி உள்ளது.

    இந்தப் பள்ளத்தில் அப்பள்ளியில் படிக்கும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் தவறி விழும் அபாயமும் உள்ளது.

    எனவே கழிவுநீர் மற்றும் குடிநீர் பைப்லைனை உடனடியாக சரிசெய்து, சுகாதாரத்தை பேணி காப்பதுடன், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதே போல் பல்வேறு பகுதியில் அவ்வபோது கழிவுநீர், குடிநீர் கலந்து வருவதாகவும் மக்கள் புகார் தெரிவித்தனர்.

    ஊராட்சித் தலைவர் சந்தானம் கூறியது: பள்ளி கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. போதிய ஆள்கள் இல்லாததால், உடனடியாக சரிசெய்ய முடியவில்லை. செவ்வாய்க்கிழமை மாலைக்குள் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai