சுடச்சுட

    

    போலி சுங்க அலுவலகம் நடத்தி மோசடி: இளைஞர் கைது

    By காஞ்சிபுரம்  |   Published on : 12th July 2013 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னையில் போலி சுங்க அலுவலகம் நடத்திய காஞ்சிபுரம் இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். மேலும் தலைமறைவான இவரது கூட்டாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்தார்.

    காஞ்சிபுரம் நாராயணபாளையம் தெருவைச் சேர்ந்த முத்து மகன் அன்பரசனும் (27) கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ஈஸ்வர ராமச்சந்திரனும் சென்னை மடிப்பாக்கத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து போலி சுங்க அலுவலகம் நடத்தி வந்துள்ளனர்.

    இந்த அலுவலகத்தில் 10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு செக்யூரிட்டி மற்றும் உதவியாளர் பணி வழங்குவதற்கு ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரையிலும், பிளஸ் 2 படித்தவர்களுக்கு எழுத்தர் பணி வழங்குவதற்கு

    ரூ. 6 லட்சம் முதல் ரூ. 6.5 லட்சம் வரையிலும், இளநிலை பட்டப்படிப்பு படித்திருந்தால் உதவி வரிவிதிப்பாளர் பதவி வழங்குவதாக ரூ. 12 லட்சம் வரையிலும், முதுநிலை பட்டப்படிப்பு படித்திருந்தால் சுங்க அதிகாரியாக பதவி வழங்குவதாக ரூ. 15 லட்சம் வரையிலும் வாங்கினார்களாம்.

    மேலும், பலருக்கு வலை விரிக்கும் வகையில் இணையதளத்தின் மூலம் காஞ்சிபுரம் அன்பரசன், இந்திய அரசின் நிதித்துறை அமைச்சகத்தின் கலால் மற்றும் சுங்கத்துறை என்று விளம்பரம் செய்து சுங்க அதிகாரி போன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை அதில் இணைத்துள்ளார்.

    இவ்வாறு பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்றவாரு கடந்த 4 மாதங்களாக அதிகபட்சம் ரூ.14 ஆயிரம் வரை சம்பளமும் வழங்கினார்களாம். இந்த நிலையில் கடந்த மாதம் சம்பளம் கொடுக்காததைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் காஞ்சிபுரம், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ரமேஷ்பாபு விசாரித்தார். விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொண்ட அன்பரசன், புகார் செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி தந்துவிடுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர் கூறியபடி யாருக்கும் பண வழங்கவில்லை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அன்பரசை குற்றப்பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து, காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

     இதுகுறித்து மாவட்டக் கண்காணிப்பாளர் விஜயகுமார் கூறியது: புகார் கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாகக் கூறிய அன்பரசன் இதுவரை யாரும் பணம் கொடுக்கவில்லை. தப்பியோடிய இவரது கூட்டாளி ஈஸ்வர ராமச்சந்திரனைப் பிடிக்க குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மடிப்பாக்கத்திóல் நடத்திவந்த போலி சுங்க அலுவலகத்தை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அன்பரசன் பயன்படுத்தி வந்த 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் மேலும் 2 கார்களும் பறிமுதல் செய்யப்படும். சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள அன்பரசனின் வங்கிக் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

     மேலும் இவர் பெயரில் உள்ள சொத்துகள் குறித்த விசாரணை நடந்து வருகிறது.

     இதுவரை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூரைச் சேர்ந்த 28 பேர் புகார் செய்துள்ளனர். சென்னையில் 10 பேர் புகார் செய்துள்ளனர். புகார்கள் அனைத்தையும் தனித்தனி வழக்குகளாகப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai