சுடச்சுட

    

    தென்னேரி அரசு உயர்நிலைப்பள்ளி தரம் உயர்வு

    By காஞ்சிபுரம்,  |   Published on : 13th July 2013 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாலாஜாபாத்தை அடுத்த தென்னேரி அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் தென்னேரி ஊராட்சியில் கடந்த 1954-ம் ஆண்டு காமராஜர் ஆட்சிகாலத்தில் அப்போதைய ஊராட்சித் தலைவர் வரதராஜுலுவின் முயற்சியால் அரசு நடுநிலைப்பள்ளி துவக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இப்பள்ளி கடந்த 1961-ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அயிமிச்சேரி, திருவாங்கரணை, அகரம், தென்னேரி, கட்டவாக்கம், சின்னிவாக்கம், நாயக்கன்குப்பம், வாரணவாசி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயனடைந்து வந்தனர்.

     தென்னேரி அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பை முடிக்கும் மாணவர்கள் வாலாஜாபாத், பண்ருட்டி ஆகிய பகுதிகளுக்குச் சென்றுதான் மேல்நிலைக் கல்வியை தொடரவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பள்ளி இடைநிற்றல் அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக 10-ம் வகுப்புக்குப் பிறகு மாணவிகளை மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் தயங்கினர்.

    எனவே தென்னேரி அரசு உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இப்பள்ளியை தரம் உயர்த்த தமிழக அரசு கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து இப்பள்ளி 2013 - 2014-ஆம் கல்வி ஆண்டு முதல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு பிளஸ் 1 கணிதம் மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 42 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

     இப்பள்ளியை அமைச்சர் டி.கே.எம். சின்னையா தொடக்கிவைத்து, 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், வி. சோமசுந்தரம், மொளச்சூர் இரா. பெருமாள், மாவட்ட ஊராட்சித் தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், வாலாஜாபாத் ஒன்றியக்குழுத் தலைவர் தென்னேரி வரதராஜுலு, காஞ்சிபுரம் நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு, காஞ்சிபுரம் வட்டாட்சியர் செல்வராஜ், மாவட்டக் கல்வி அலுவலர் சீத்தாலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகுமார், தலைமை ஆசிரியர் திவாகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai