சுடச்சுட

    

    ஹோட்டல் கட்டுமானப் பணி: கான்கிரீட் சரிந்து ஒப்பந்ததாரர் சாவு

    By செங்கல்பட்டு,  |   Published on : 19th July 2013 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாமல்லபுரத்தில், வியாழக்கிழமை சொகுசு ஹோட்டல் கட்டுமானப் பணியின்போது, திடீரென கான்கிரீட் சரிந்து விழுந்ததில் ஒப்பந்ததாரர் உயிரிழந்தார். கட்டடத் தொழிலாளர்கள் 14 பேர் காயமடைந்தனர்.

    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில், சொகுசு ஓட்டல் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. வியாழக்கிழமை மாலை, ஹோட்டலின் வாயிலில் (போர்ட்டிகோ) நான்கு பில்லர்களை இணைத்து கான்கிரீட் போடும் பணி நடந்தது. இப்பணியில் தொழிலாளர்கள் 20 பேர் ஈடுபட்டிருந்தனர்.

     அப்போது, கான்கிரீட் போடுவதற்காக, கீழே கொடுத்திருந்த இணைப்பு கம்புகள் பாரம் தாங்காமல் சரிந்தன. இதில் கான்கிரீட் அனைத்தும் விழுந்ததில், இடிபாடுகளுக்கிடையே தொழிலாளர்கள் பலர் சிக்கிக்கொண்டனர்.

    தகவலறிந்து செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம், சிறுசேரி ஆகிய இடங்களில் உள்ள தீயணைப்பு படைவீரர்கள் வந்து புல்டோசர் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, மாமல்லபுரத்தை அடுத்த அச்சரவாக்கத்தைச் சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் குமார் (40) என்பவர், கழுத்தில் கம்பி குத்திய நிலையில் இறந்து கிடந்தார். கட்டுமான தொழிலாளர்கள் ஒடிசாவைச் சேர்ந்த சின்னா (18), கணேஷ் (22), மிதுன் (24), குஷீர்ரெட்டி (28), அசோக் (23), சிபு (23), மகராஜ் (23), ஆந்திரத்தைச் சேர்ந்த  நரசிம்மன் (17), கிருஷ்ணா (20),  செய்யாறு எட்டியப்பன் (37), திண்டிவனம் முனுசாமி  (44) செஞ்சி செல்வம் (37) மாமல்லபுரம் கொக்கிலமேடு பகுதியைச்சேர்ந்த மோகன் (60), ஏசுதாஸ் (45) ஆகிய 14 பேர், இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர். இவர்கள் மீட்கப்பட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தகவலறிந்த ஆட்சியர் சித்ரசேனன், சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை முடுக்கி விட்டார். கோட்டாட்சியர் செல்லப்பா, திருப்போரூர் எம்எல்ஏ தண்டரை கே.மனோகரன், மாமல்லபுரம் பேரூராட்சிதலைவர் கோதண்டபாணி, திருக்கழுகுன்றம் வட்டாட்சியர் மனோகரன் உள்ளிட்டோரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இச்சம்பவம் தொடர்பாக ஓட்டல் திட்ட மேலாளர் தேஜா ரெட்டி, என்ஜீனியர் சீனிவாசன் ஆகியோரிடம் மாமல்லபுரம் டிஎஸ்பி மோகன், இன்ஸ்பெக்டர் சாரதி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai