சுடச்சுட

    

    அரசுப் பள்ளி சுற்றுச்சுவர் அத்துமீறி இடிப்பு

    By காஞ்சிபுரம்,  |   Published on : 20th July 2013 02:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரம் அருகே திருட்புக்குழி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி சுற்றுச்சுவர் அத்துமீறி இடித்துத் தள்ளப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மக்கள், இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

     காஞ்சிபுரத்தை அடுத்த பாலுச்செட்டி அருகே உள்ளது திருட்புக்குழி. இங்கு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகில், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி உள்ளது. இப்பள்ளி கட்டடத்துக்கு தெற்கு மற்றும் தேசிய நெடுஞ்சாலைக்கு வடக்கே உள்ள கால்வாய் புறம்போக்கு நிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு பள்ளிக்குச் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.

     இதற்கு ஆரம்பம் முதலே அக்கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், அந்த நிலம் தனக்குச் சொந்தமானது எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகத் தெரிகிறது.

    இந்நிலையில், திடீரென அந்த சுற்றுச்சுவரை அத்துமீறி ஜேசிபி எந்திரம் மூலம் அவர் இடித்து தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்த காஞ்சிபுரம் வருவாய் ஆய்வாளர் அ.மணிவண்ணன் சம்பவ இடத்துக்குச் சென்று மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

     இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியது: இப்பிரச்னை தொடர்பாக கிராம மக்களுக்கும், வெங்கடேசனுக்கும் இடையே நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் தொடர்ந்து 3 முறை கிராம மக்கள் சார்பில் யாரும் ஆஜராகாததால், வெங்கடேசனுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. இச்சம்பவம் தொடர்பாக புகார் கொடுக்காததால் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று தெரிவித்தன.

    வருவாய் வட்டாரங்கள் கூறுகையில், பள்ளிச் சுற்றுச்சுவர் அமைந்துள்ள இடம் வருவாய்த்துறை கணக்குப்படி கால்வாய் புறம்போக்கு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில், சுற்றுச்சுவரை இடித்தது தவறு. மேலும் இதற்கு மேல் பள்ளிக் கட்டடத்துக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தன.

     இடித்துத் தள்ளப்பட்ட பள்ளி சுற்றுச்சுவரை மீண்டும் கட்டி மாணவர்களின் பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று அக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai