சுடச்சுட

    

    காஞ்சிபுரம் மாவட்டக் கண்காணிப்புக் குழுக் கூட்டம், ஜூலை 22-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முறையாவது இக்கூட்டம் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் எம்.பி. விஸ்வநாதனுக்கு அனுப்பிய கடிதம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு மற்றும் கணிப்பாய்வுக் கூட்டம் குழுத் தலைவர் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் வரும் ஜூலை 22-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் திட்டங்களாக தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடு குறித்து 3 மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற வேண்டும்.

    ஆனால் தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இக்கூட்டம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

    2011 ஜூலை 21-ஆம் தேதி மாவட்டக் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது.

    அதன் பிறகு கடந்த இரு ஆண்டுகளாக இக்கூட்டம் நடைபெறவே இல்லை.

    இது குறித்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் பி. விஸ்வநாதன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

    இந்நிலையில், 2013-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி மாவட்டக் கண்காணிப்பு குழுக் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் அறிவித்திருந்தார்.

    ஆனால், குறிப்பிட்ட தேதியில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுவதால், சட்டப்பேரவை உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத நிலையில் உள்ளது எனக் கூறி மே 13-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாவட்ட கண்காணிப்புக் குழுக் கூட்டமும் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த முறையாவது நடைபெறுமா? இதற்கிடையில் வரும் ஜூலை 22-ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்ட கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெறுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டுத் தொகுதியைத் தவிர மற்ற அனைத்து சட்டப் பேரவை உறுப்பினர்களும் அ.தி.மு.க.வினரே உள்ளனர்.

    இதேபோல் உள்ளாட்சி அமைப்புகளிலும் ஒரு சில நகராட்சி, பேரூராட்சிகளைத் தவிர அனைத்தும் அ.தி.மு.க. வசம் உள்ளன. இப்படி இருக்கையில் தி.மு.க.வைச் சேர்ந்த ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு மாவட்ட கண்காணிப்புக் குழுத் தலைவராகவும், துணைத் தலைவராக காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் பி.விஸ்வநாதன் துணைத் தலைவராகவும் உள்ள கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் கலந்து கொள்வார்களா?

    அப்படியே கலந்து கொண்டாலும், கண்காணிப்புக் குழுக் கூட்டத்தை அமைதியாக நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai