சுடச்சுட

    

    புதுவை - திருப்பதி ரயில் கரசங்காலில் நின்று செல்ல கோரிக்கை

    By காஞ்சிபுரம்,  |   Published on : 21st July 2013 02:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை - திருப்பதி இடையே இயங்கும் பயணிகள் ரயில் மதுராந்தகத்தை அடுத்த கரசங்காலில் நின்றுச் செல்ல வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது கரசங்கால். இக்கிராமத்தைச் சுற்றி நெடுங்கல், வெளியம்பாக்கம், அல்லூர், முருங்கை, கொங்கரை, மாம்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

    இக்கிராமங்களுக்கு சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமான அரசு ஊழியர்கள் வந்து செல்கின்றனர்.

    இக்கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லை. எனவே புதுவை - திருப்பதி இடையே இயங்கும் பயணிகள் ரயில் கரசங்கால் ரயில் நிலையத்தில் நின்றுச் சென்றதால், இப்பகுதிகளுக்கு வரும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மற்றும் கிராமப்பகுதி மக்களுக்கு வசதியாக இருந்தது.

    இந்நிலையில் இந்த ரயில் கடந்த ஜூலை 10-ம் தேதி முதல் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் அரசு அலுவலர்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இப்பகுதியில் பஸ் வசதிகள் இல்லாததால், 5 கி.மீ., தொலைவில் உள்ள தொழுப்பேடு வரை நடந்துச் சென்று பஸ்களைப் பிடிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    எனவே புதுவை - திருப்பதி பயணிகள் ரயிலை மீண்டும் கரசங்காலில் நின்றுச் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது தவிர மேல்மருவத்தூர் - விழுப்புரம் இடையே இயங்கும் மின்சார ரயில், சென்னை எழும்பூர் - விழுப்புரம் வரையிலான பயணிகள் ரயில் ஆகியவற்றை கரசங்காலில் நின்றுச்  செல்ல அனுமதிக்க வேண்டும்.

    கரசங்காலில் ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள், மக்கள் சக்தி இயக்க மாவட்டச் செயலர் தேவநாதன் தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை (ஜூலை 18) ஈடுபட முயன்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் வட்டாட்சியர் ஆனந்தி, டி.எஸ்.பி. ராஜேந்திரன், செங்கல்பட்டு ஸ்டேஷன் மாஸ்டர் மணிவண்ணன், திண்டிவனம் ஸ்டேஷன் மாஸ்டர் ஸ்ரீதர் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அடுத்த 15 நாள்களுக்குள் நல்ல முடிவு எடுக்கப்படவில்லை என்றால் கட்டாயம் ரயில்மறியல் போராட்டம் நடைபெறும் என்று அதிகாரிகளிடம் கூறிவிட்டு பொதுமக்கள் கலைந்துச் சென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai