Enable Javscript for better performance
குறைந்த செலவில் கூடுதல் மகசூல்:  திருந்திய நெல் சாகுபடி செய்ய அழைப்பு- Dinamani

சுடச்சுட

  

  குறைந்த செலவில் கூடுதல் மகசூல்:  திருந்திய நெல் சாகுபடி செய்ய அழைப்பு

  By  காஞ்சிபுரம்  |   Published on : 25th July 2013 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருந்திய நெல் சாகுபடியில் கூடுதல் மகசூல் பெறலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வே. செüந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
   இது குறித்து அவர் கூறியது: நெல் சாகுபடியில் செலவினங்களான நிதி, தண்ணீர், விவசாய தொழிலாளர்கள் கூலி ஆகியவற்றை பெருமளவில் குறைத்து கூடுதல் மகசூல் மற்றும் நல்ல வருமானத்தை வழங்குவது திருந்திய நெல் சாகுபடி. எனவே இப்பருவத்தில் ஏடிடி -37, ஏடிடி -43, ஏடிடி - 45, வெள்ளை பொன்னி ஆகியன சிறந்த ரகங்களாகும். 110-115 நாள் வயதுடைய திருந்திய நெல் சாகுபடி முறையில் 1 ஏக்கர் நெல் நடவிற்கு 2 கிலோ விதை போதும். நாற்றங்கால் 1 சென்ட் பரப்பில் பாலித்தின் பை விரித்து அதன் மேல் நாற்றங்கால் நிலத்தில் மண், மக்கிய தூளாக்கப்பட்ட தொழு உரம் சமபங்கில் கலந்து சேராக்கி 2 அங்குலம் உயரத்துக்கு பரப்பி அதில் 600 கிராம் பொடியாக்கிய ஏடிபி உரத்தினை தூவ வேண்டும்.
   24 மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து முளை கட்டிய 2 கிலோ நெல் விதைகளை 1 சென்ட் பரப்பில் சேற்றின் மேல் பரவலாக விதைக்க வேண்டும். பின்பு மக்கிய தூளாக்கப்பட்ட தொழு உரம் லேசாக தூவி பூவாளியால் சேறும் விதைகளும் கலயாதவாறு நாற்றங்கால் நனையுமாறு தினமும் 3 முறை தண்ணீர் தெளிக்க வேண்டும். நாற்றுவிட்ட 4-ம் நாள் முதல் 13-ம் நாள் வரை நாற்றங்கால் நனையுமாறு தினசரி 2 முறை நீர்பாய்ச்சி உடன் நிறுத்த வேண்டும். நாற்று நன்கு வளர அரைகிலோ யூரியாவை தண்ணீரில் கரைத்து 7-ம் நாள் ஒரு சென்ட்டில் தெளிக்க வேண்டும். 14-ம் நாள் நடவுசெய்வதற்கு தயாராக இருக்கும்.
   நாற்று நடுவதற்கு முன்பே திட்டமிட்டு வயலை மக்கிய தொழுஉரம் மற்றும் பசுந்தாள் இட்டு நன்றாக உழவு செய்து சேறாக்கி அடிஉரமாக கடைசி உழவில் மண் பரிசோதனை உரப்பரிந்துரைப்படி 27 கிலோ யூரியா, 45 கிலோ ஏடிபி, 34 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை கலந்து இட வேண்டும். உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், ÷பாஸ்போபைக்ட்ரியா, தலா 4 பாக்கெட் போதுமான அளவு தொழு உரத்தில் கலந்து 1 ஏக்கருக்கு தூவ வேண்டும். உரத்துடன் கலந்து இடக்கூடாது.
   பயிருக்கு தேவையான நுண்ணூட்டக் கலவை 5 கிலோவை 20 கிலோ மண்ணுடன் கலந்து நிலம் நன்கு சமப்படுத்திய பின் இட வேண்டும்.
   இப்போது 14 நாள் வயதுள்ள நெல் நாற்றுகளை வரிசைக்கு வரிசை 10 அங்குலம், பயிருக்கு பயிர் 10 அங்குலம் இடைவெளி விட்டு சதுரமுறையில் நடவு செய்யவும். முதல் 10 நாள் வரை லேசாக மண் நனையுமாறு தண்ணீர் கட்டவேண்டும். பிறகு ஒரு அங்குலம் தண்ணீர் நிறுத்தி நீர் மறைய நீர் கட்டவும். நடவு செய்த பிறகு 10 நாள் வரை தூளாக்கப்பட்ட 4 கிலோ நீளபச்சைபாசியை போதுமான எருவுடன் கலந்து தூவ வேண்டும். கோடைப் பருவம் நீளபச்சைப்பாசியின் வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது.
   நடவு செய்த 15-ம் நாள் கோனோவிடர் அல்லது பவர்விடர் எனும் நெல்லில் களையெடுக்கும் கருவியால் களைகளை நிலத்திலேயே உழுது உரமாக்கலாம். இதனால் களைகள் கட்டுப்படுவதுடன் நெல் பயிரில் முதிர்ந்த வேர்கள் அறுபட்டு புதிய இளம்வேர்கள் உருவாகி கூடுதல் மகசூலுக்கு வழிகிடைக்கும். இதே போல் 10 நாள் இடைவெளிவிட்டு 3 முறை களை எடுக்க வேண்டும். மேலுரமாக 22 கிலோ யூரியாவை நடவு செய்த 25 மற்றும் 35-ம் நாளில் 2 முறை இடவேண்டும். பூச்சிநோய் தென்பட்டால் அருகில் உள்ள வட்டார மேலாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பொருளாதார சேதநிலை அறிந்து பயிர் பாதுகாப்பு மேற்கொள்ள வேண்டும்.
   மேற்கண்ட திருந்திய நெல் சாகுபடி முறையால் சாகுபடி செலவு குறைகிறது. மேலும் அதி வளமான கதிர்கள், முற்றிய தானியங்கள், கூடுதல் எடை கிடைக்கும். பயிர் எளிதில் சாயாத தன்மை, பூச்சி நோய், எலிவெட்டு ஆகியன வெகுவாக குறைந்து நல்ல மகசூல் கிடைப்பதுடன் கூடுதல் வருமானம் ஈட்டமுடியும் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai