தாட்கோ மூலம் கடனுதவி பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
By காஞ்சிபுரம் | Published on : 25th July 2013 09:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாடு திட்டங்களுக்கு ஆன்லைன் மூலம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தாட்கோ மூலம் நிலம் வாங்குதல் (பெண்கள்), நிலம் மேம்படுத்துதல் (இருபாலரும்) வயது வரம்பு 18 வயது முதல் 55 வயது வரை விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். தொழில் முனைவோர் பொருளாதார மேம்பாட்டு திட்டம், தொழில் முனைவோர் திட்டங்கள், பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைக்க விரும்புபவர்கள் 18 வயது முதல் 55 வயது வரை, குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள்ளும் இருக்க வேண்டும்.
இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் படி 18 வயது முதல் 35 வயது வரை, ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சம் உள்ளவர்களும், மருத்துவமனை, மருந்துக்கடை, கண் கண்ணாடியகம், முடநீக்க மையம், இரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல் திட்டத்திற்கு குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ. 3 லட்சம் வரை இருக்கலாம்.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான சுழல்நிதி பெற 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்குள் இருப்பின் விண்ணப்பிக்கலாம். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி, குழு ஊக்குநரின் குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ. 2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி பெற மாற்று திறனாளிகள், விதவைகள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நலிந்த கலைஞர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்திற்கு வயது வரம்பு இல்லை. இந்திய குடிமைப்பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி 1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி ஆகியன பெற 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு இத்திட்டத்திற்கு இல்லை. மேலும் பட்டய கணக்கர், செலவு கணக்கர் ஆகிய தொழிலுக்கு நிதியுதவி பெற 25 வயது முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை.
மேற்கண்ட திட்டங்களில் பயன் பெற விரும்புபவர்கள் www. application.tahdco.com என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை ஆன்லைனில் பதிவு செய்யவேண்டும். தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம் மூலமும் பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பதிவு செய்யும்போது குடும்ப அட்டை எண் அல்லது இருப்பிட சான்று, சாதி சான்று, வருமான சான்று ஆகியவற்றின் எண், வழங்கப்பட்ட தேதி, விண்ணப்பிக்க விரும்பும் திட்டம் மற்றும் திட்ட அறிக்கை சம்பந்தமான பதிவுகளை அதற்கான இடங்களில் அவசியம் பதிவு செய்ய வேண்டும். புகைப்படத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவேண்டும்.