சுடச்சுட

    

    அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்:ஆகஸ்ட் 1-ல் தி.க. ஆர்ப்பாட்டம்

    By காஞ்சிபுரம்  |   Published on : 29th July 2013 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அதன் தலைவர் கி. வீரமணி தெரிவித்தார்.

    அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க காஞ்சிபுரம் வந்த கி. வீரமணி செய்தியாளர்களிடம் கூறியது: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் அக்கட்சியினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வர்.

    அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற கோரிக்கைக்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். கடந்த 2006-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது குறித்து அரசாணை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து வந்த அரசு, அர்ச்சகர் படிப்புக்கான கல்லூரி திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைக்கப்படும் என்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 206 பேர் அர்ச்சகர் படிப்பை முடித்துள்ளனர்.

    இந்நிலையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதற்கு சங்கராச்சாரியார்கள் மற்றும் ஜீயர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றனர். இதனால் பயிற்சி முடித்தவர்கள் அர்ச்சகர் பணிக்கு செல்ல முடியவில்லை. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் சுமுகமாக பேசித் தீர்த்துக் கொள்ளப்படும் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்தார். இது வரவேற்கத்தக்க நல்ல முயற்சி. ஆனால் 4 மாதங்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு எடுத்தாகத் தெரியவில்லை. எனவே இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றார் வீரமணி.

     இந்த சந்திப்பின் போது காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அசோகன், மாவட்டச் செயலாளர் கோபால்சாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai