காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்துக்கு 27 புதிய பஸ்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையிலிருந்து வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கான புதிய பஸ்கள் மற்றும் புனரமைக்கப்பட்ட பஸ்களை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் வியாழக்கிழமை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்குக் கழகம் (விழுப்புரம் கோட்டம்) காஞ்சிபுரம் மண்டலத்தில் 27 புதிய பஸ்களும், 2 புனரமைக்கப்பட்ட பஸ்களும் அடங்கும். காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலிருந்து சென்னை, திருச்சி, புதுச்சேரி, திருப்பதி, கும்பகோணம் ஆகிய வழித்தடங்களில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் பழைய பஸ்களுக்கு மாற்றாக இந்த பஸ்கள் இயக்கப்படும்.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா இயக்கி வைத்த பஸ்கள், காஞ்சிபுரம் பஸ் நிலையத்திலிருந்து அந்தந்த வழித்தடத்தில் இயக்கி வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்குக் கழகம் (விழுப்புரம் கோட்டம்) காஞ்சிபுரம் மண்டல பொதுமேலாளர் நாகேந்திரன் தலைமை வகித்தார்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், வி.சோமசுந்தரம், இரா.பெருமாள், காஞ்சிபுரம் நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு, போக்குவரத்துக்க கழக துணை மேளாளர்கள் கே. இளங்கோவன், வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.