காஞ்சிபுரம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதனிடையே மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற காஞ்சிபுரம் தாசில்தாரை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேட்டு பாலாற்றில் மணல் கடத்தப்படுவதாக புதன்கிழமை இரவு காஞ்சிபுரம் தாசில்தார் பானுவுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் தாசில்தார் பானு தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது அப்பகுதியில் இரண்டு மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அந்த மாட்டுவண்டிகளை தாசில்தார் பானு மடக்கி விசாரணை நடத்தினார். இதில் அவர்கள் செவிலிமேடு பகுதியைச் சேர்ந்த அசோக், சுரேஷ் என்பது தெரியவந்தது.
தகவலறிந்த கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்து திரண்டு வந்து தாசில்தார் பானுவை முற்றுகையிட்டனர். அங்கு மணல் கடத்தல் நடைபெறவில்லை என அவர்கள் தாசில்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த போலீஸார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்துச் சென்றனர். இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட அசோக் மற்றும் சுரேஷை போலீஸார் கைது செய்தனர்.