காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் ஸ்ரீ சாரதா நவராத்திரி மஹோற்சவம் புதன்கிழமை தொடங்குகிறது.
காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் அம்பாள் குழந்தை வடிவில் அருள்பாலிக்கிறார். மேலும் இங்கு முப்பெரும் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோரின் ஒரே வடிவமாக கொண்டு காமாட்சியம்மன் காட்சி தருகிறார்.
எனவே நவராத்திரி காலத்தில் காமாட்சியம்மனை தரிசனம் செய்வது மிகவும் விஷேசமாகும். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் காமாட்சியம்மன் கோயிலில் ஸ்ரீ சாரதா நவராத்திரி மஹோற்சவம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும்.
இந்த மஹோற்சவத்தின்போது, தினமும் காமாட்சியம்மனுக்கு விஷேச அபிஷேக, அலங்காரம், ஆராதனை நடைபெறும். மேலும் கன்யா பூஜை, ஸிவாஸினி பூஜை முதலிய பூஜைகளும், லட்சார்ச்சனையும் நடைபெறும்.
இரவில் ஸ்ரீ காமாட்சியம்மனை கொலு மண்டபத்தில் எழுந்தருளச் செய்து சூரசம்ஹார உற்சவம் நடைபெறும்.
இதைத் தொடர்ந்து சங்கீத கச்சேரி, தீபாராதனை நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு புரட்டாசி மாதம் 8-ஆம் தேதி (செப். 23) புதன்கிழமை ஸ்ரீ சாரதா நவராத்திரி மஹோற்சவம் தொடங்குகிறது.
புரட்டாசி மாதம் 15-ஆம் தேதி (அக்டோபர் 1) வரை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். புரட்டாசி 17-ஆம் தேதி (அக்டோபர் 3) விஜயதசமி அன்று காலை தீர்த்தவாரி நடைபெறும். இரவில் காமாட்சியம்மன் தங்கரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.