சாயத் தொழிற்சாலை அதிபர்களிடம் பத்திரிகைகளின் பெயரைக் கூறி பணம் கேட்டு மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் செவ்வாய்க்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அய்யன்பேட்டை, முத்தியால்பேட்டை சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலைய நிர்வாக இயக்குநர்கள் ஜே. சுப்பையா, எம்.ஏ. வரதராஜன், ஆர்.வி. ரஞ்சித்குமார் உள்ளிட்டோர் எஸ்.பி. விஜயகுமாரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
அய்யன்பேட்டை, முத்தியால்பேட்டை பகுதிகளில் 62க்கும் மேற்பட்டோர் சலவை, சாயத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இதில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியோடு வள்ளுவப்பாக்கம் கிராமத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சாயக்கழிவுகள் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வள்ளுவப்பாக்கத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் தனமுத்து என்பவர் தன்னை பத்திரிகையாளர் என்று கூறிக் கொண்டு சாயத் தொழிற்சாலை அதிபர்களிடம் ரூ. 1 லட்சம் பணம் கேட்டு மிரட்டி வருகிறார். எனவே அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட எஸ்.பி. விஜயகுமார், இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காஞ்சிபுரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.