மாற்றுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு நுழைவுச் சீட்டு வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் சார்பில் 8-ஆம் வகுப்பு, 9-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு தவறிய, இடைநின்ற மாணவர்களுக்கான இலவச மாற்றுப் பள்ளி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்தின் தலைமை இடத்திலும் நடைபெற்று வருகிறது.
இந்த மாற்றுப் பள்ளியில் இந்த மாதம் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு நுழைவுச் சீட்டு வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட குப்புசாமி நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.மோகனவேல் தலைமை வகித்தார்.
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா உதவித் திட்ட இயக்குநர் பிரேம் ஆனந்த், பள்ளித் தலைமை ஆசிரியை கலைவாணி ஆகியோர் மாணவர்களுக்கு நுழைவுச் சீட்டை வழங்கினர். மேலும் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அவர்கள் எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சிரில் சுதாகர், பகுதி ஒருங்கிணைப்பாளர் லோகாம்பாள், பள்ளி ஆசிரியர் ராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.