Enable Javscript for better performance
மண்ணிவாக்கத்தில் வாக்குச்சாவடி அமைத்துத் தர கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் கூடுவாஞ்சேரியை அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில் வசிக்கும் 5 ஆயிரம் வாக்காளர்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைத்துத் தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    கூடுவாஞ்சேரியை அடுத்த வண்டலூர் மண்ணிவாக்கம் ஊராட்சி விரிவுப் பகுதியில் உள்ள அம்பேத்கர் நகர், அண்ணா நகர், சுவாமி விவேகானந்தர் நகர், ஸ்ரீ வர்த்தமான் நகர் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    இதில் அம்பேத்கர் நகரில் உள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் புதிய வாக்குச்சாவடி அமைத்து தரக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு கொடுத்தனர்.

    அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

    மண்ணிவாக்கம் ஊராட்சியில் 10, 11, 12 வார்டுகளில் 2800 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் கடந்த தேர்தல்களின்போது 6 கி.மீ. தொலைவுக்கு ஊரப்பாக்கம் ரயில்வே பாதையைக் கடந்து, தேசிய நெடுஞ்சாலை வழியாக வண்டலூரை சுற்றிச் சென்று மண்ணிவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வரவேண்டியிருந்தது.

    நேரடி பஸ் வசதி இல்லாத நிலையில் முதியவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் சிரமத்தின் காரணமாக பலர் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு செல்வதேயில்லை. இதன் காரணமாக 100 சதவீதம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும் குறைந்த சதவீத எண்ணிக்கையிலேயே வாக்களித்து வருகின்றனர்.

    எனவே 10, 11, 12 வார்டுகளைச் சேர்ந்த 2800 வாக்காளர்கள் அம்பேத்கர் நகரில் உள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைத்துத் தரும்படி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இது குறித்து அப்பகுதி வார்டு கவுன்சிலர் கவிதா சேகரை கேட்டபோது, "புதிய வாக்கு சாவடி அமைத்து தரக் கோரி மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர்.

    இங்கு வாக்குச் சாவடி அமைத்துத் தர நடவடிக்கை மேற்கொள்ளும்படி வருவாய்  கோட்டாட்சியருக்கு, ஆட்சியர் உத்தரவிட்டு 4 மாதங்களுக்கு மேலாகியும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதது வேதனையை அளிக்கிறது. எனவே அடுத்த மாதம் 24-ம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலின்போதே அம்பேத்கர் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய வாக்குச்சாவடி அமைத்துத் தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' எனக் கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai