Enable Javscript for better performance
ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க கட்டணம் ஏன்?...- Dinamani

சுடச்சுட

    

    நிலத்தடி நீர் வணிகமாவதை தடுக்கவே ஆழ்துளைக் கிணறு, திறந்த வெளிக் கிணறு அமைக்கக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட திட்ட அலுவலர் முத்துமீனாள் தெரிவித்தார்.

    தமிழகத்தில் காஞ்சிபுரம் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதனால் காஞ்சிபுரம் உள்ளிட்ட தண்ணீர் பஞ்சமே ஏற்படாத மாவட்டங்களில் கூட இப்போது நிலைமை தலைகீழாக மாறி குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேகவதி, பாலாறு, செய்யாறு, கிளியாறு உள்ளிட்ட ஆறுகள், ஏரிகள் நிறைந்துள்ளன. இருந்தும் குடிநீர் பஞ்சத்தைப் போக்க அதிகாரிகள் கைகளைப் பிசைந்து நிற்கின்றனர். பாலாற்றுப் படுகையில் இருந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும் ரயில் குடிநீர், தனியார் குளிர் பான ஆலை உள்ளிட்டவைகளும் பாலாற்றை நம்பியே உள்ளன.

    குடிநீர்ப் பஞ்சத்தைக் கருத்தில் கொண்டு இப்போது மாவட்டத்தில் பலர் நிலத்தடி நீரை வணிகமாக்கி வருகின்றனர். தனியார் நிலங்களில் 800 அடி, 1000 அடி ஆழத்துக்கு 6 முதல் 8 அங்குலத்துக்கு ஆழ்துளைக் கிணறு போட்டு 24 மணி நேரமும் தண்ணீரை உறிஞ்சி லாரி, லாரியாக விற்பனை செய்யும் நிலை அதிகரித்து விட்டது. குறிப்பாக தொழிற்சாலைகளுக்கு, கரும்பு ஆலைகளுக்கு அதிக அளவில் தண்ணீர் விற்பனை செய்யும் நிலை காணப்படுகிறது.

    இந்த நிலை காஞ்சிபுரம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து வருகிறது.

    எனவே நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும், வணிகமாவதை தடுக்கும் வகையிலும் ஆழ்துளைக் கிணறு, திறந்த வெளிக் கிணறு அமைப்பவர்கள், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு குறிப்பாக ஊராட்சி நிர்வாகத்துக்கு ரூ. 5 ஆயிரம் கட்டணம் கட்டி அனுமதி பெற வேண்டும். இதன் பிறகு மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு போடும் நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு, ஆழ்துளைக் கிணறு போட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆழ்துளைக் கிணறு போடும் நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்தில் ரூ. 15 ஆயிரம் பணம் கட்டி மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணறு போடுவதற்கான அங்கீகாரக் கடிதத்தை பெற வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

    இது குறித்து மாவட்ட திட்ட அலுவலர் முத்துமீனாள் கூறியது: குடிநீர்ப் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் புதிது, புதிதாக ஆழ்துளைக் கிணறு போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சி வணிகமாக்கும் நிலையும் அதிகரித்துள்ளது. இது போன்ற செயலைத் தடுக்கும் வகையிலும், பாதுகாப்பற்ற நிலையில் ஆழ்துளைக் கிணறு போடப்படுவதை தடுக்கவும், அதன் மூலம் குழந்தைகள் சாவை தடுக்கும் வகையிலும் தமிழக அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

    இதுவரை ஆழ்துளைக் கிணறு போடும் நிறுவனங்கள், குடிநீர் வடிகால் வாரியத்திடம் அனுமதி பெற்று பணிகளை மேற்கொண்டு வந்தன.

    இப்போது மாவட்ட நிர்வாகத்திடம் ரூ. 15 ஆயிரம் கட்டி அனுமதி பெற வேண்டும். மேலும் ஆழ்துளைக் கிணறு, திறந்தவெளிக் கிணறு போட முன்வரும் பொதுமக்கள் அந்தந்த ஊராட்சி நிர்வாகத்திடம் ரூ. 5 ஆயிரம் கட்டி அனுமதி பெற்று பாதுகாப்பான முறையில் ஆழ்துளைக் கிணறு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

    இதன் மூலம் ஆழ்துளைக் கிணறு அதிக அளவில் போடுவதை கட்டுப்படுத்த முடியும் என்கிறார் திட்ட அலுவலர் முத்து மீனாள்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai