Enable Javscript for better performance
சாக்லெட் மூலப்பொருள்களுடன் லாரி கடத்தல்: இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சாக்லெட் மூலப்பொருள்களுடன் லாரி கடத்தல்: இருவர் கைது

    By செங்குன்றம்  |   Published on : 17th April 2015 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு சாக்லெட் மூலப்பொருள்கள் ஏற்றி வந்த லாரியை கடத்திச் சென்ற இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

    சென்னை அங்கப்பன் நாயக்கன் தெருவில் லாரி புக்கிங் அலுவலகம் வைத்து நடத்தி வருபவர் ஜோசப் (45). இவரது அலுவலகத்துக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் ஆந்திரத்தில் இருந்து சாக்லெட் மூலப்பொருள்களை ஏற்றிக் கொண்டு 5 லாரிகள் வந்தன. அங்குள்ள கிடங்கில் நிறுத்தி வைக்கப்பட்ட அந்த லாரிகள் பிறகு நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. ஆனால், அங்கு 4 லாரிகள் மட்டுமே வந்தன. ஒரு லாரியைக் காணவில்லை.

    இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலும், புழல் காவல் நிலையத்திலும் ஜோசப் புகார் செய்தார். இதனிடையே, காணாமல்போன லாரி புழல் சைக்கிள் கடை பகுதியில் உள்ள கிடங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக புழல் காவல் நிலைய ஆய்வாளர் தேவராஜுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அவர் காவலர்களுடன் சென்றபோது, கடத்தப்பட்ட லாரியில் இருந்த பொருள்களை வேறு லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதுதொடர்பாக அந்தக் கிடங்கின் உரிமையாளர் சகாயராஜிடம் விசாரித்தனர்.

    அப்போது, திருவொற்றியூரில் வசித்த ராஜஸ்தானைச் சேர்ந்த மகேந்திர சிங் என்பவர் அவரது நண்பர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சச்சின் மூலமாக லாரியில் உள்ள பொருள்களை இறக்கி வேறு லாரியில் ஏற்றும்படியும், அதற்காக ரூ.15 ஆயிரம் தருவதாகவும் சகாயராஜிடம் கூறியுள்ளார். மேலும், அவர்கள் லாரியையும், சாக்லெட் மூலப்பொருள்களையும் கடத்தி விற்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து, லாரியையும், மூலப்பொருள்களையும் போலீஸார் பறிமுதல் செய்ததோடு, சகாயராஜையும், சச்சினையும் வியாழக்கிழமை கைது செய்தனர். பின்னர், இருவரும் திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான லாரி ஓட்டுநர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரிஷி, மகேந்திர சிங் ஆகியோரை போலீஸார் தேடிவருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai