Enable Javscript for better performance
நெல் கொள்முதலில் சுரண்டல்: விவசாயிகள் குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    நெல் கொள்முதலில் சுரண்டல்: விவசாயிகள் குற்றச்சாட்டு

    By காஞ்சிபுரம்,  |   Published on : 17th April 2015 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய அரசுத் தரப்பில் போதிய மையங்கள் நிறுவப்படாததால், தனியார்கள் விவசாயிகளை சுரண்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    நெல் விவசாயிகளின் நலனுக்காக அரசு கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது. அதாவது மோட்டா ரகம் நெல் கிலோவுக்கு ரூ. 14.10 என்ற அளவிலும், சன்னரகம் நெல் கிலோ ரூ. 14.70 என்ற அளவிலும் அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் 56 நேரடி கொள்முதல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதன் மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை ஓரளவுக்கு அரசு நிர்ணயித்த விலைக்கு விற்று வந்தனர்.

    நிகழாண்டு மாவட்டம் முழுவதும் நான்கைந்து நேரடி கொள்முதல் மையங்கள் தவிர போதிய அளவு கொள்முதல் மையங்களை மாவட்ட நிர்வாகம் அமைக்கவில்லை. இதற்கு பதிலாக நடமாடும் (மொபைல்) கொள்முதல் மையத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்த நடமாடும் கொள்முதல் மையத்தை தொடர்பு கொண்டால், அழைப்பை எடுப்பதே இல்லை என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

    இதுகுறித்து அனைத்து விவசாய சாகுபடி பயிர்கள் உற்பத்தி விவசாயிகள் சங்க காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் திருவேங்கடம் கூறியதாவது:

    நெல்லுக்கு அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், கொள்முதல் செய்வதற்கு மையங்களை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகமும், வேளாண் துறையும் தவறிவிட்டன. கடந்த ஆண்டு ஓரளவுக்கு கொள்முதல் மையங்களை ஏற்படுத்தி இருந்த மாவட்ட நிர்வாகம் நிகழாண்டு நடமாடும் கொள்முதல் மையத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறுகிறது.

    இந்த மையத்தை செல்லிடப்பேசியிலோ, தொலைபேசியிலோ தொடர்பு கொண்டால், விவசாயிகளின் இருப்பிடத்துக்கு வந்து கொள்முதல் செய்து கொள்வார்கள் என்றனர். ஆனால், குறிப்பிட்ட எண்களில் தொடர்பு கொண்டால் எந்த முறையான பதிலையும் அவர்கள் கூறுவதில்லை. இதனால் தனியாருக்கு அரசு நிர்ணயித்த விலையை விட குறைந்த விலைக்கு விற்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது என்றார்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் நேரு கூறியதாவது:

    நேரடி நெல் கொள்முதல் மையங்களை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் தவறிவிட்டது. இதனால் தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளது. மோட்டா ரகம் நெல்லுக்கு அரசு கிலோ ரூ.14.10 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்துள்ளது. அரசு நேரடி கொள்முதல் மையங்கள் இல்லாததால், தனியாரிடம் கிலோ ரூ.9 முதல் ரூ.10-க்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளது.

    மேலும், நெல் கொள்முதல் செய்யும் தனியார்கள் வண்டிக் கூலியாக மூட்டைக்கு ரூ.15 முதல் ரூ.25 வரையிலும் வசூலிக்கின்றனர். ரூ.100-க்கு ரூ.3 கமிஷன், உள்ளடி வண்டிச்சத்தம் (மண்டியில் இருந்து ஆலைக்கு) மூட்டைக்கு ரூ.5, திருவிழாக் கால வசூல் என மூட்டைக்கு ரூ.20, எடைக் கட்டணம் வண்டிக்கு ரூ.50 முதல் ரூ.100 என்று பிடித்தம் செய்து விடுகின்றனர். இதனால் ஒரு கிலோ நெல்லின் கொள்முதல் விலை ரூ.8 என்ற அளவுக்கு குறைந்து விடுகிறது.

    ஒரு வண்டியில் 700 கிலோ நெல் எடை இருந்தால், அதை மூட்டைக்கு 90 கிலோ என்ற அளவில் பிரித்து மூட்டை கணக்கு போட்டு பணம் வழங்குகின்றனர். அதாவது ஒரு மூட்டை நெல் 75 கிலோ, சாக்கு (கோணிப்பை) 2 கிலோ என 77 கிலோ என்றுதான் கணக்கிட வேண்டும். இவ்வாறு எடையிலும் விவசாயிகள் சுரண்டப்படுகின்றனர். குறைந்த விலையில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் தனியார் அந்த நெல்லை அரசுக்கு, அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை செய்து விடுகின்றனர். இதில் அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai