Enable Javscript for better performance
காஞ்சிபுரம் நில அபகரிப்புப் பிரிவு போலீஸார் மீது வழக்குப் பதிவு- Dinamani

சுடச்சுட

    

    காஞ்சிபுரம் நில அபகரிப்புப் பிரிவு போலீஸார் மீது வழக்குப் பதிவு

    By காஞ்சிபுரம்  |   Published on : 28th January 2015 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரம்,  ஜன.  27: நில அபகரிப்பு வழக்குத் தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட நில அபகரிப்புப் பிரிவு போலீஸார் மீது வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், மலைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (63). இவருக்குச் சொந்தமான பல கோடி மதிப்பிலான சொத்து, மலைப்பட்டு கிராமத்தில் உள்ளது.

    இந்த சொத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அபகரிக்கப்பட்டது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட நில அபகரிப்புப் பிரிவு போலீஸில் கிருஷ்ணவேணி புகார் செய்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் இதுதொடர்பாக நில அபகரிப்புப் பிரிவு போலீஸார் தங்களை மிரட்டுவதாக சென்னையில் உள்ள காவல் துறைத் தலைவரிடம் கிருஷ்ணவேணி புகார் அளித்தார். மேலும் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணவேணி வழக்குத் தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு மாற்றி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீஸார், காஞ்சிபுரம் மாவட்ட நில அபகரிப்புப் பிரிவு போலீஸாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    புகாரை உறுதி செய்த வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் நில அபகரிப்புப் பிரிவு போலீஸார் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் மேற்கண்டோரை கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்துவதாக தகவல் பரவியது.

    இதுகுறித்து காஞ்சிபுரம் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, "சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் காஞ்சிபுரம் மாவட்ட நில அபகரிப்புப் பிரிவு போலீஸாரிடம் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆனால் இதுவரை யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்த தகவல்கள் அனைத்தும், வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் வசம் உள்ளது' என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai