Enable Javscript for better performance
சேவை இல்லை...!- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீபெரும்புதூர், ஜன. 27: போதிய கணினிப் பயிற்சி பெறாத வருவாய்த் துறை அலுவலர்களால் மின்னஞ்சல் முறையில் சான்றிதழ் வழங்கப் பரிந்துரை செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, சான்றிதழ் கோரி இ-சேவை மையத்தில் விண்ணப்பித்துள்ள பலர் நீண்ட நாள் காத்திருக்கும் அவலநிலை தொடர்கிறது.

    குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியங்களில் மாங்காடு, குன்றத்தூர், படப்பை, செரப்பனஞ்சேரி, மதுரமங்கலம், சுங்குவார்சத்திரம், வல்லம், தண்டலம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய ஒன்பது குறு வட்டங்களில் உள்ள சுமார் 120 வருவாய் கிராமங்களில் உள்ளோர் ஜாதி, வருவாய், இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்தான் பெற வேண்டும்.

    கடந்த காலங்களில் சான்றிதழ்கள் பெற விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் கையொப்பம் பெற்று நேரிடையாக வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதனால் ஒரு வாரத்துக்குள்ளாகவே சான்றிதழ்களைப் பெற முடிந்தது.

    ஜனவரி 25 முதல் பொது இ-சேவை மையம்: இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு பொது இ-சேவை மையம் கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் இயங்கிவருகிறது. இங்கு வருவாய்த் துறை சான்றிதழ்களுக்கு விண்ணப்பம் பெறப்படுகிறது.

    அதன்படி, ஒருவர் ஜாதி சான்றிதழ் பெற வேண்டுமானால் மாற்றுச் சான்றிதழ், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அடையாள அட்டையை இம்மையத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் மையத்தில் உள்ளவர்கள் இதுகுறித்து குறிப்பிட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கும்படி அனுப்பிவைக்கின்றனர்.

    கிராம நிர்வாக அலுவலர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவாய்த் துறை ஆய்வாளருக்குப் பரிந்துரை செய்யவேண்டும். பின்னர் வருவாய் ஆய்வாளர் விசாரணை நடத்தி, தலைமையிடத்து வட்டாட்சியருக்கும், வட்டாட்சியருக்கும் மின்னஞ்சல் மூலமாகவே பரிந்துரை செய்து அனுப்பிவைக்க வேண்டும் அதன்பின்பு விண்ணப்பித்தவருக்கு சான்றிதழ் வழங்கப்படும். இதன்படியே, வருமானம், இருப்பிடம், முதல் பட்டதாரி உள்ளிட்ட சான்றிதழ்களும் தகுந்த சான்றிதழ்களைப் பார்த்து, விண்ணப்பம் பெறப்படுகிறது.

    குறைந்த மனுக்களுக்கே சான்றிதழ்கள் விநியோகம்: இந்த நிலையில், போதிய கணினி பயிற்சி அனுபவம் இல்லாத கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பத் தெரியவில்லை. இதனால் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை பெறப்பட்ட 440 மனுக்களுக்கு வெறும் 15 மனுக்களுக்கேச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் கடந்த 22ஆம் தேதி வரை பெறப்பட்டுள்ள சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களில் சுமார் 250 மனுக்களுக்கேத் தீர்வு காணப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பித்து பல நாள்களாகியும் சான்றிதழ்கள் பெறமுடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சான்றிதழ்கள் பெறுவதில் ஏற்படும் கால தாமதத்தைத் தவிர்க்க கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு மின்னஞ்சல் மூலம் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்ய பயிற்சி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai