Enable Javscript for better performance
\\\"நம்ம டாய்லெட்\\\' திட்டத்தைக் கைவிடும் காஞ்சிபுரம் நகராட்சி!- Dinamani

சுடச்சுட

    

    "நம்ம டாய்லெட்' திட்டத்தைக் கைவிடும் காஞ்சிபுரம் நகராட்சி!

    By காஞ்சிபுரம்  |   Published on : 28th January 2015 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரம், ஜன. 27: காஞ்சிபுரத்தில் செயல்படுத்தத் திட்டமிட்ட "நம்ம டாய்லெட்' திட்டத்தைக் கைவிட நகராட்சி திட்டமிட்டுள்ளது.

    தமிழகத்திலேயே முதல்முறையாக, காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரத்தில் 2013-ஆம் ஆண்டு "நம்ம டாய்லெட்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்த நகராட்சிகளின் இயக்குநரகம் முடிவு செய்தது.

    அதன்படி காஞ்சிபுரம் நகராட்சியில் கடந்த 2012-13-ஆம் நிதியாண்டில் 5 யூனிட் "நம்ம டாய்லெட்' திட்டத்தை அறிமுகப்படுத்த தலா ரூ.15 லட்சம் வீதம் மொத்தம் ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

    2013-14-ஆம் நிதியாண்டில் மேலும் 6 யூனிட் "நம்ம டாய்லெட்' திட்டத்தை செயல்படுத்த காஞ்சிபுரம் நகராட்சிக்கு அனுமதி கிடைத்தது.

    கட்டுமானம் ஏதுமின்றி பைபர் தகடால் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட இந்தக் கழிவறையைப் பராமரிப்பது எளிது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் இது இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நம்ம டாய்லெட்டை தனியார் பங்களிப்புடன் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் இருப்பர் என்றும், சூரிய மின் சக்தியுடன் கூடிய விளக்கு வசதியும் இருக்கும் என்றும் கூறப்பட்டது.

    இந்த நிலையில் முதல் கட்டமாக காஞ்சிபுரம் பேருந்து நிலையில் கடந்த ஆண்டு 2 யூனிட் "நம்ம டாய்லெட்கள்' அமைக்கப்பட்டன.

    காமாட்சியம்மன் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில், காந்தி சாலை, வட்ட அலுவலகம், சங்குசாப்பேட்டை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் உள்ளிட்ட 9 இடங்களில் "நம்ம டாய்லெட்' அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

    "நம்ம டாய்லெட்' திட்டத்தை கைவிடும் நகராட்சி: இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள "நம்ம டாய்லெட்டை' நகராட்சி முறையாகப் பராமரிக்க தவறிவிட்டது.

    சுத்தம் செய்யும் பணியை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த முடியாமல் போனதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

    எனவே மேலும் 9 இடங்களில் "நம்ம டாய்லெட்' அமைக்கும் திட்டத்தை நகராட்சி கைவிட்டுள்ளது.

    அதற்கு பதிலாக காமாட்சியம்மன் கோயில், கைலாசநாதர் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில், தேரடித் தெரு, பேருந்து நிலையம், சங்குசாப்பேட்டை, ராணுவ வீரர் சாலை, ரங்கசாமிக் குளம் சந்திப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என ஏற்கெனவே "நம்ம டாய்லெட்' அமைக்க திட்டமிட்ட இடங்களில் நவீன சுகாதார வளாகம் என்ற பெயரில் கட்டடத்துடன் கூடிய கழிவறை அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது நகராட்சி.

    இதுகுறித்து நகராட்சிப் பொறியாளர் சுப்புராஜ் கூறியது: "நம்ம டாய்லெட்' திட்டத்தை தனியார் பங்களிப்புடன் பராமரிப்பது என்பது சாத்தியமில்லை.

    எந்த தனியார் நிறுவனமும் இதற்கு முன்வரவில்லை. எனவே பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட "நம்ம டாய்லெட்டை' சுத்தம் செய்வதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட அதே நிதியில், திட்டமிட்ட அதேப் பகுதியில் நவீன சுகாதார வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த நவீனக் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணி தனியார் பங்களிப்புடனே நடைபெறும் என்றார் அவர்.

    "நம்ம டாய்லெட்' திட்டத்தில் சுத்தம் செய்ய தனியார் பங்களிப்பு கிடைக்காத சூழ்நிலையில், நவீன சுகாதார வளாகத்தைப் பராமரிக்க மட்டும் தனியார் பங்களிப்பு கிடைக்குமா?

    ஏற்கெனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நவீன சுகாதார வளாகம் கட்டப்பட்டு, சுத்தம் செய்யும் பணிக்கு தனியார் பங்களிப்பு இல்லாமல், செயல்படாமல் மூடியே கிடக்கிறது.

    இது போன்ற சூழ்நிலையில் காஞ்சிபுரம் நகராட்சியில் புதிதாக சுகாதார வளாகம் கட்டுவது மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் என்று சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai