Enable Javscript for better performance
பேருந்து நிலைய தாற்காலிகக் கடைகளில் பூக்கடைகள் மட்டுமா? உறுப்பினர்கள் எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    பேருந்து நிலைய தாற்காலிகக் கடைகளில் பூக்கடைகள் மட்டுமா? உறுப்பினர்கள் எதிர்ப்பு

    By காஞ்சிபுரம்  |   Published on : 28th January 2015 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரம், ஜன. 27: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்ட தாற்காலிகக் கடைகளில் பூக் கடைகளுக்கு மட்டும் இடம் ஒதுக்குவற்கு நகர்மன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    காஞ்சிபுரம் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு தலைமை வகித்தார். துணைத் தலைவர் பூக்கடை ஆறுமுகம், ஆணையர் சர்தார், பொறியாளர் சுப்புராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம்:

    ஜெகன் (தி.மு.க.): தாயார் குளம் சுடுகாட்டில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி முடிவடைந்து ஏழெட்டு மாதங்களுக்கு மேல் ஆகின்றன. ஆனால் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதை நகராட்சி எப்போது பயன்பாட்டுக்கு கொண்டுவரும்?

    நகர்மன்றத் தலைவர்: விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாதவன் (தி.மு.க.): பேருந்து நிலையத்தில் சாலையோர வியாபாரிகளுக்காக தாற்காலிகமாக கட்டப்பட்டது.

    இங்கு பூக்கடைகளுக்கு மட்டும் இடம் ஒதுக்கீடு செய்வது குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    சுரேஷ் (தி.மு.க.): பூக்கடைகளுக்கென்று ராஜ வீதியில் பூக்கடைச் சத்திரம் உள்ளது.

    அவ்வாறு இருக்கையில் பேருந்து நிலையத்திலும் பூக்கடைகளுக்கு மட்டும் இடம் ஒதுக்கீடு செய்வது என்றால் மற்ற வியாபாரிகளுக்கு எங்கு இடம் ஒதுக்குவது? அனைவருக்கும் பாரபட்சமின்றி இடம் ஒதுக்க வேண்டும். இதே கருத்தை திமுக உறுப்பினர் ஜெகன் உள்ளிட்டோரும் வலியுறுத்தினர்.

    நகர்மன்றத் தலைவர்: முதலில் பூக்கடைகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற சாலையோர வியாபாரிகளுக்கு பேருந்து நிலையத்தில் வேறு பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.

    சண்முகம் (தே.மு.தி.க.): பேருந்து நிலையம் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. பேருந்து நிலையத்துக்குள் பேருந்து நுழையும்போது, ஏதேனும் விபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் ஓட்டுநர் பேருந்தை இயக்க வேண்டி உள்ளது. அந்த அளவுக்கு பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. மேலும் சாலையோர வியாபாரிகளும் அதிக அளவில் உள்ளனர். பயணிகளுக்கு ஒதுங்குவதற்கு கூட இடம் இல்லை.

    எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, சாலையோர வியாபாரிகளை வரைமுறைப்படுத்த வேண்டும்.

    தாற்காலிக கடை கட்டப்பட்டுள்ள இடத்தில், பயணிகளுக்கு காத்திருக்கும் பகுதியாக மாற்ற வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் 56 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai