சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும், சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் திமுகவினர் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 450 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் ரெட்டை மண்டபம் சந்திப்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு நகரச் செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம் தலைமை வகித்தார். இதில், மாவட்ட அவைத் தலைவர் பொன்மொழி, தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை சிவகாஞ்சி போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
உத்தரமேரூரில்...
உத்தரமேரூர் ஒன்றிய திமுகவினர் சார்பில் உத்தரமேரூர் - செங்கல்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த உத்தரமேரூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து, மாலை விடுவித்தனர்.
செங்கல்பட்டில்...
மாமல்லபுரம் கங்கை கொண்டான் மண்டபம் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு, நகரச் செயலாளர் வெ.விஸ்வநாதன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முருகன், நந்தகோபால், அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 38 பேரை கைது செய்த போலீஸார், அவர்களை மாலையில் விடுவித்தனர்.
செங்கல்பட்டில் நகரச் செயலாளர் நரேந்திரன் தலைமையில், புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், முன்னாள் நகர்மன்றத் தலைவர் அன்புச்செல்வன், நிர்வாகிகள் மண்ணு, சரவணன், சந்தோஷ்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மறியல் செய்த 35 பேரை கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூரில்....
ஸ்ரீபெரும்புதூர் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர்கள் கோபால், கருணாநிதி ஆகியோர் தலைமையில் திமுகவினர் 200 பேர் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே காந்தி சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல் குன்றத்தூர் ஒன்றிய திமுக சார்பில், ஒன்றியச் செயலாளர் படப்பை மனோகரன் தலைமையில், படப்பை பேருந்து நிலையம் அருகே வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.
மதுராந்தகத்தில்...
மதுராந்தகம் தேரடி வீதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, நகரச் செயலர் கே.குமார் தலைமை வகித்தார்.
மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக, கோஷங்களை எழுப்பியபடி வந்த திமுகவினர், மதுராந்தகம் தேரடி வீதி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் 100-க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.