மாமல்லபரம் ஐந்து ரதம் பகுதியில் சிற்பங்களை உடைத்து நொறுக்கியதுடன், பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளையும் அடித்து நொறுக்கிய இளைஞரை போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மாமல்லபுரம் ஐந்துரதம் சாலையில் சிற்பக்கலைக் கூடம் நடத்தி வருபவர் விஜயகுமார் (35). இவர் சில தினங்களுக்கு முன்பு தனது கடைமுன், சாலையில் சென்றவர்களை கிண்டல் செய்ததுடன், தனது கடையில் இருந்த சிற்பங்களை போட்டு உடைத்ததாகவும், தனது விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தையும் எரித்ததாகவும் தெரிகிறது.
மேலும், தனது வீட்டில் உள்ள பொருள்களை சாலையில் வீசிய இவர், தான் வளர்த்து வந்த நாயையும் அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. அவரிடம் விசாரணை நடத்திய மாமல்லபுரம் போலீஸார், அவரை எச்சரித்து அனுப்பினர்.
இந்நிலையில், மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தேநீர் மற்றும் பெட்டிக் கடைகளை விஜயகுமார் திங்கள்கிழமை அடித்து நொறுக்கியதாகத் தெரிகிறது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள், விஜயகுமாருக்கு மனநல சிகிச்சை அளிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் முனுசாமி புகார் அளித்தார். இதையடுத்து, ஐந்து ரதம் பகுதியில் சுற்றித்திரிந்த விஜயகுமாரை போலீஸார் பிடிக்க முயன்றபோது, அவர் ஆம்புலன்ஸில் ஏற மறுத்துள்ளார்.
பின்னர் வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸில் ஏற்றிய போலீஸார், அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸார் கூறுகையில், விஜயகுமார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளோம். அரசு மருத்துவமனையில் அவரது நிலை குறித்து சான்றிதழ் பெற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு அவரை மனநல மருத்துவமனையில் சேர்ப்பது குறித்து முடிவெடுப்போம் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.