மழைநீர் கால்வாயை இடித்து ஆக்கிரமிப்பு

செங்கல்பட்டு நெடுஞ்சாலைத் துறையால் கட்டப்பட்டிருந்த மழைநீர் கால்வாயை இடித்து தனியாரால் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
செங்கல்பட்டு ஆர் வி தெரு - ஜிஎஸ்டி சாலை சந்திப்பில் தனியாரால் இடித்து அகற்றப்படும் நெடுஞ்சாலைத் துறையால் கட்டப்பட்ட மழைநீர் கால்வாய் பாலம்.
செங்கல்பட்டு ஆர் வி தெரு - ஜிஎஸ்டி சாலை சந்திப்பில் தனியாரால் இடித்து அகற்றப்படும் நெடுஞ்சாலைத் துறையால் கட்டப்பட்ட மழைநீர் கால்வாய் பாலம்.
Published on
Updated on
1 min read

செங்கல்பட்டு நெடுஞ்சாலைத் துறையால் கட்டப்பட்டிருந்த மழைநீர் கால்வாயை இடித்து தனியாரால் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் விரிவாக்கப் பணிகளுக்காக செங்கல்பட்டு நெடுஞ்சாலைத் துறை சார்பில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நெடுஞ்சாலையின் இரு பக்கமும் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டது. சாலையும் விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில், திருமண மண்டபங்கள், பெரிய வணிக வளாகங்கள் வைத்திருப்போர் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கி விட்டனர். சாலையிலேயே படிக்கட்டுகள், சுழற்படிகளை அமைத்து வருகின்றனர். இதனால் குறுகலான பாதையில் நடந்து செல்ல முடியாமல் பாதசாரிகள், குறிப்பாக முதியோர் நடந்து செல்வதில் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
இதனை நெடுஞ்சாலைத் துறையினரும், நகராட்சி நிர்வாகமும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகில் ஜிஎஸ்டி சாலையையொட்டி உள்ள தனியார் திருமண மண்டபத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், லாரி எடை மேடையையும் நடத்தி வருகின்றனர். அவர்கள் எடைமேடைக்கு வரும் கனரக லாரிகள் எடை போடுவதற்காக வரும் போதெல்லாம் நெடுஞ்சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், சாலையை விரிவுபடுத்தி சாலை பகுப்பான் அமைக்கப்பட்டுள்ளதால், லாரிகளை எடை மேடைக்கு கொண்டுவர முடியவில்லை. இதனால், லாரிகள் வர ஏதுவாக, அதே பகுதியில் உள்ள அழகேச நகரின் விரிவாக்கப் பகுதியான ஆர்வி தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய், நெடுஞ்சாலைத் துறை கட்டிய மழைநீர் கால்வாய் ஆகியவற்றை விடுமுறை நாளான சனிக்கிழமை இடித்து தகர்த்துள்ளனர். பின்னர் லாரிகள் வர வழி ஏற்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளதாகத் தெரிகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் நடந்து செல்ல சிரமத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து அப் பகுதியினர் கேட்டபோது, அனுமதி வாங்கித் தான் இடித்ததாகத் தெரிவித்துள்ளனர். இதனால் சனிக்கிழமை காலை வெளியே சென்றவர்கள் இரவு வீடு திரும்பியபோது, கால்வாயும், பாதையும் வெட்டியிருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயமடைந்ததாகத் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தனது சொந்த வசதிக்காக இவ்வாறு அநியாயம் செய்கின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com