பழையனூர் ஊராட்சிப் பகுதியில் கடந்த 6 மாதங்களாக முறையாக குடிநீர் வராததைக் கண்டித்து காலிக் குடங்களுடன் 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியாக பழையனூர் ஊராட்சி உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் இல்லாமல் அவதிபட்டு வந்தனர். இந்தக் குறைபாட்டை களையக் கோரி மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் அரசு அதிகாரிகள் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஊராட்சிநிர்வாகத்தைக் கண்டித்து பழையனூர் சாலையில் 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் வட்டாரக்குழு செயலர் கே.வாசுதேவன் தலைமை வகித்தார்.
முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜா முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் அப்பகுதி இளைஞர்மன்ற நிர்வாகிகள் சதீஷ், கண்ணாயிரம், சங்கர், ஞானம், தாஸ், ராஜேந்திரன், அருள்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மறியல் தொடர்பான தகவலை அறிந்து ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தற்சமயம் லாரி மூலம் குடிநீர் வழங்கப்பட உள்ளது.
இன்னும் 3 நாள்களுக்குள் இப்பகுதியில் 2 கைப்பம்புகள் அமைத்து தரப்படும் என்ற உறுதிமொழியை வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ் தெரிவித்ததால் அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.