மதுராந்தகம் அருகே புதிதாக டாஸ்மாக் கடையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்து இந்திய மாதர் சங்க நிர்வாகிகளும், பொதுமக்களும் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுராந்தகத்தை அடுத்த படாளம் அருகே கொளம்பாக்கம் பகுதியில் மதுராந்தகம் வருவாய்த் துறையினர் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு செய்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இப்பகுதி மக்கள் பலமுறை சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், 2 நாள்களுக்கு முன் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க மது பாட்டில்களை கொண்டு வந்ததாகத் தெரிகிறது. இதனைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், அனைத்து இந்திய மாதர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் படாளம் கூட்டுச் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த மதுராந்தகம் வட்டாட்சியர் ஏகாம்பரம், டி.எஸ்.பி. கந்தன் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், அதில், டாஸ்மாக் கடை திறக்கப்படமாட்டாது. அங்கிருந்த அனைத்து மது பாட்டில்களும் அகற்றப்படும் என உறுதி அளித்ததன் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.