பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட படப்பை - நீலமங்கலம் சாலை மேம்பாலம்

படப்பை - நீலமங்கலம் சாலையில் நபார்டு திட்டத்தின் மூலம் ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட படப்பை - நீலமங்கலம் சாலை மேம்பாலம்
Published on
Updated on
1 min read


படப்பை - நீலமங்கலம் சாலையில் நபார்டு திட்டத்தின் மூலம் ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து இந்த மேம்பாலம் உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட படப்பை-நீலமங்கலம் இணைப்புச் சாலையில் உள்ள தரைப்பாலம் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக சீரமைக்கப்படாமலும், புதுப்பிக்கப்படாமலும் இருந்தது. இதனால் கடந்த இரு வருடங்களாக கனமழையின் போது, தரைப்பாலத்தின் மேல் சுமார் 10 அடிக்கு மழைநீர் சென்றது. இதன் காரணமாக படப்பை - ஒரத்தூர் இணைப்புச் சாலையில் சுமார் 10 நாள்களுக்கும் மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் இச்சாலையை பயன்படுத்தும் ஒரத்தூர், காவனூர், நாட்டரசன்பட்டு, சிறுவஞ்சூர், வளையங்கரனை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் படப்பை பகுதிக்கு வந்து செல்ல சிரமத்துக்குள்ளாயினர்.
இதையடுத்து, படப்பை - நீலமங்கலம் இணைப்புச் சாலையில் உள்ள தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்ற வேண்டும் என இச்சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, இச்சாலையில் உள்ள தரைப்பாலத்தை நபார்டு திட்டத்தின் மூலம் மேம்பாலமாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டு, அதற்காக ரூ. 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜைகள் நடத்தப்பட்டு, மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டது. 
இந்நிலையில், ஒரத்தூர் மற்றும் நீலமங்கலம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வந்த மேம்பாலப் பணிகள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு முடிவடைந்தது. 
பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை காணொலி காட்சி மூலம் பாலத்தை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். 
இதைத் தொடர்ந்து, மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ 
கே.பழனி ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், சந்திரபாபு, குன்றத்தூர் ஒன்றியச் செயலாளர் எழிச்சூர் ராமச்சந்திரன், படப்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநர் ஒரத்தூர் என்.டி.சுந்தர், வனக் குழுத் தலைவர் சுபாஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.