கொத்தடிமை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என ஆட்சியர்களை தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலர் மங்கத்ராம் சர்மா கேட்டுக் கொண்டார்.
கொத்தடிமை தொழிலாளர் முறை குறித்த திறனாய்வுக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தொழிலாளர் ஆணையர் கே.பாலசந்திரன், கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஆர்.நந்தகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு தலைமை வகித்து, மங்கத்ராம் சர்மா பேசியது:
கொத்தடிமைகளாக பணிபுரியும் தொழிலாளர்களைக் கண்டறிந்தவுடன், அவர்களை மீட்டு, மறுவாழ்வு நிவாரணத் தொகையாக ரூ. 20 ஆயிரம் தொழிலாளர் துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், கல்வி தகுதிக்கேற்ப அவர்களுக்கு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் மூலம் உரிய தொழிற்பயிற்சிகள், பசுமை வீடுகள் வழங்கவும், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு இல்லாத தொழிலாளர்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்க, துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கொத்தடிமை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவோர் மீது, 1976 ஆம் ஆண்டு கொத்தடிமை தொழிலாளர் முறை சட்டப் பிரிவு, 9,16,17,18 மற்றும் இந்திய தண்டனை சட்டப் பிரிவு 370 (3,5) 374 ஆகியவற்றின் கீழ் வழக்கு தொடரப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் கொத்தடிமை இல்லாத மாவட்டமாக உருவாக்க ஆட்சியர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.
இதில், மதுராந்தகம் சார் ஆட்சியர் கிள்ளி சந்திரசேகர், செங்கல்பட்டு சார் ஆட்சியர் ப.ஜெயசீலன், அனைத்துத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.