கச்சபேஸ்வரர் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

கச்சபேஸ்வரர் கோயில் குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கச்சபேஸ்வரர் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்


கச்சபேஸ்வரர் கோயில் குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கச்சபேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் கடை ஞாயிறு எனும் நேர்த்திக் கடன் செலுத்தும் விழா நடைபெறுவது வழக்கம். 
அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை கச்சபேஸ்வரர் கோயிலுக்கு வருகை புரிந்த திரளான பக்தர்கள் மண் சட்டியில் தேங்காய், பழம் வைத்து, மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர். அப்போது, ஏராளமான பக்தர்கள் மாவிளக்குக்கு பயன்படுத்தும் எண்ணெய், மஞ்சள்தூள், குங்குமம், பொரி உள்ளிட்ட பூஜைப் பொருள்களை கோயில் குளத்தில் அதிக அளவில் கரைத்தனர். அந்தப் பொருள்களை மீன்கள் உட்கொண்டன.
குளத்தின் மேற்பரப்பில் எண்ணெய்ப் படலமும் அதிக அளவில் தேங்கியது. இதனால், குளத்தில் உள்ள மீன்கள் சுவாசிக்க முடியாமல் இறந்து மிதந்தன. 
இதையடுத்து, கோயில் வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதன் காரணமாக கோயிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகம் சார்பில் பணியாளர்கள் சிலர் கடந்த சில நாள்களாக மீன்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது: ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் கடை ஞாயிறு விழாவில் திரளான பக்தர்கள் கச்சபேஸ்வரர் கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவர். 
அப்போது, அவர்கள் பொரி உள்ளிட்ட பொருள்களை கோயில் குளத்தில் அதிக அளவில் போடுவது வழக்கம். இதனால், கோயில் குளம் சுகாதாரச் சீர்கேடு அடைந்து வந்தது.
இதையடுத்து, கோயில் குளத்தின் அருகே மீன்களின் உணவுக்காக பூஜைப் பொருள்களை குளத்தில் கரைக்கக் கூடாது என்ற வாசகம் கொண்ட அறிவிப்புப் பலகையை கோயில் நிர்வாகம் வைத்துள்ளது. 
எனினும், இந்த அறிவிப்பை பெரும்பாலான பக்தர்கள் பொருட்படுத்துவதில்லை. கோயில் நிர்வாகமும் பக்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அலட்சியம் காண்பித்து வருகிறது.
எனவே, இதுபோன்ற முக்கிய விழாக் காலங்களில் சுகாதாரத்தைப் பேணும் வகையில், பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com