இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்த மழை

காஞ்சிபுரத்தில் அதிகாலை வரை கனமழை பெய்தது. அதிகபட்சமாக 98 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 
இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்த மழை

காஞ்சிபுரத்தில் அதிகாலை வரை கனமழை பெய்தது. அதிகபட்சமாக 98 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் முதல் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. அதேபோல், வெயிலின் தாக்கம் பகல் முழுவதும் அதிகமாகவும், மாலை, இரவு வேளைகளில் கருமேகங்கள் சூழ்ந்தும் காணப்படுகிறது. இதனால், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வானிலையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு 7 மணி முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து, ஏகனாம்பேட்டை, அய்யம்பேட்டை, விஷார், கீழம்பி, கதிர்பூர், உத்தரமேரூர், செங்கல்பட்டு, வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. பிறகு சில மணிநேரம் நின்றது.
இதையடுத்து, நள்ளிரவு பலத்த காற்றுடன் மீண்டும் தொடங்கிய கனமழை அதிகாலை வரை வெளுத்து வாங்கியது. கனமழையால், காஞ்சிபுரம் நகர் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 
கனமழை பெய்துள்ளதற்கு விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி தெரிவித்தனர். அதிகாலை வரை மழை பெய்தது. 
ஸ்ரீபெரும்புதூரில்...
வல்லக்கோட்டை பகுதியில், கடந்த திங்கள்கிழமை இரவு காற்றுடன் கூடிய பெய்த பலத்த மழையில் அப்பகுதியில் உள்ள மின்மாற்றி சாய்ந்தது. 
காஞ்சிபுரம் மாட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள படப்பை, ஒரகடம், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த திங்கள்கிழமைமாலை முதல் இரவு 8 மணி வரை பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில், ஒரகடத்தை அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் குடியிருப்பு பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்மாற்றி சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மின்மாற்றி சாய்ந்தபோது அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் அசம்பாவிதம் நிகழாமல் தவிர்க்கப்பட்டது.
இதனிடையே, மழையில் சாய்ந்த மின்மாற்றியை சீரமைக்கும் பணியில் ஒரகடம் மின்வாரிய ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். 
திருவள்ளூரில்...
திருவள்ளூர் மாவட்டப் பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு தொடங்கி, அதிகாலை வரையில் பரவலாக மழை பெய்தது. 
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்தது. மாலையில் இருந்து கருமேகம் சூழ்ந்து காணப்பட்டன. அதைத் தொடர்ந்து நள்ளிரவில் மழை பரவலாக பெய்யத் தொடங்கியது. 
செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை மழை பெய்தது. திருத்தணி, ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி, அம்பத்தூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், சோழவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு தொடங்கி, அதிகாலை வரையில் பெய்த மழையால் சாலையில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது.
குளம், குட்டைகளிலும் மழைநீர் தேங்கியது. மழை காரணமாக திருவள்ளூர் பகுதியில் அரண்வாயல், பாப்பரம்பரம்பாக்கம் மற்றும் வெங்கத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெற்பயிர் நடவு செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இரவு முதல் மின்தடை ஏற்பட்டது. 
வேலூரில்...
வேலூர் மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை இரவு இடி, மின்னலுடன் விடியவிடிய கனமழை கொட்டியது. அதிகபட்சமாக ஆற்காட்டில் 94 மி.மீ. மழை பதிவானது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பகல் நேரத்தில் கடுமையான வெயில் நிலவுகிறது. திங்கள்கிழமை பகலில் அதிகபட்சம் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. கோடை வெயில் காலம் முடிந்தபோதிலும் வெயிலின் தாக்கம் குறையாததால் வேலூர் மாவட்ட மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை மாவட்டம் முழுவதும் தட்பவெப்ப நிலையில் சற்று மாறுதல் ஏற்பட்டது. பின்னர், வேலூர், ஆற்காடு, அரக்கோணம், வாணியம்பாடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து. 
சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை விடியவிடிய பெய்தது. வேலூர் உள்பட பல பகுதிகளில் காற்று பலமாக வீசியது. மழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மாவட்டம் முழுவதும் பெய்த கன மழையால் விவசாயிகளும், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். இரவு முழுவதும் கன மழை தொடர்ந்து பெய்தது. செவ்வாய்க்கிழமை முழுவதும் வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது. 
வாணியம்பாடியில்...
வாணியம்பாடி, ஜூலை 3: வாணியம்பாடி பகுதியில் திங்கள்கிழமை இரவு முழுவதும் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நீதிமன்ற வளாகத்தில் மழைநீர் தேங்கி நின்றது.
வாணியம்பாடி, திம்மாம்பேட்டை, ஆலங்காயம், உதயேந்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், திங்கள்கிழமை இரவு 8 மணி முதல் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. 
வாணியம்பாடி நீதிமன்ற வளாகத்திலும், அரசினர் தோட்டப் பகுதியிலும் மழைநீர் தேங்கியது. இதனால் வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்ற வளாகம், காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். மழையின் காரணமாக நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு 5 மணி நேரத்துக்கும் மேல் மின்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
திருப்பத்தூரில்...
 திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை சுற்றுப் பகுதிகளில் விடியவிடிய கன மழை பெய்தது. சில பகுதிகளில் உயர் மின் அழுத்த கம்பிகள் மீது மரங்கள் விழுந்ததால் மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதனால் திருப்பத்தூர் நகரம், புதுப்பேட்டை, புள்ளானேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 6 மணி நேரத்துக்கும் மேல் மின்தடை செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில்...
அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 98.30 .மி.மீ பதிவானது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 3.42 செ.மீ. மழை பெய்துள்ளது. சராசரியாக 24.44 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரம் -98, உத்தரமேரூர் -89, ஆலந்தூர் -56, வாலாஜாபாத் -26, செங்கல்பட்டு -20, மதுராந்தகம்-15, ஸ்ரீபெரும்புதூர் -13, தாம்பரம் -12, சோழிங்கநல்லூர்-06 , திருக்கழுகுன்றம்-06 

திருவள்ளூர் மாவட்டத்தில்...
திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நிலவரப்படி, அதிகபட்சமாக திருவள்ளூர் -83 மி.மீ, குறைந்தபட்சமாக பள்ளிப்பட்டு- 17 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மழையளவு(மில்லி மீட்டரில்) :
திருவள்ளூர் - 83, திருத்தணி -81, அம்பத்தூர் -80, பூண்டி- 74, பூந்தமல்லி -57, செம்பரம்பாக்கம் - 47, திருவாலங்காடு - 47, ஊத்துக்கோட்டை- 45, தாமரைப்பாக்கம் -38, கும்மிடிப்பூண்டி-33, பொன்னேரி - 31, ஆர்.கே. பட்டு - 30, செங்குன்றம் - 22, சோழவரம்-22, பள்ளிப்பட்டு - 17 மி.மீ. மழை பதிவானது.

வேலூர் மாவட்டத்தில்...
மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆற்காட்டில் 94 மில்லி மீட்டர் மழை பதிவானது. 
ஆலங்காயம்- 75.2, குடியாத்தம்- 54, மேல்ஆலத்தூர் -51.2, வாணியம்பாடி-50, ஆம்பூர்-42.4, வாலாஜாபேட்டை-39, காவேரிபாக்கம் -31.2, வேலூர்-24.4, திருப்பத்தூர்-23.4, சோளிங்கர்-15 மி.மீ. மழை பதிவானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com