குடியிருப்புகளில் தேங்கி நிற்கும் கழிவுநீர்: வேளாங்கண்ணி நகர் மக்கள் அவதி

சந்தவேலூர் ஊராட்சிக்குள்பட்ட அன்னை வேளாங்கண்ணி நகர் பகுதியில் குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கும் மழை நீர் மற்றும் கழிவுநீரால் அப்பகுதி பொதுமக்களுக்கு சுகாதாரச் சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

சந்தவேலூர் ஊராட்சிக்குள்பட்ட அன்னை வேளாங்கண்ணி நகர் பகுதியில் குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கும் மழை நீர் மற்றும் கழிவுநீரால் அப்பகுதி பொதுமக்களுக்கு சுகாதாரச் சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
 காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், சந்தவேலூர் ஊராட்சிக்குள்பட்ட அன்னை வேளாங்கண்ணி நகர் பகுதியில் உள்ள முதல் தெரு, விவேகானந்தர் தெரு, பாரதியார் தெரு ஆகிய பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட வீடுகளில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
 இந்நிலையில், வேளாங்கண்ணி நகர் பகுதிக்குள்பட்ட தெருக்களில் முறையாக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், தெருச்சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் விவேகானந்தர் தெரு சாலையில் மழைநீரும், முதல் தெருவில் கழிவுநீரும் தேங்கி நிற்கிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 இந்நிலையில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது பெய்து வரும் கனமழையால், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற வழியின்றி, தேங்கிநிற்பதால், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
 இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அன்னை வேளாங்கண்ணி நகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக தெருச் சாலை, கழிவுநீர் கால்வாய் ஆகியவை அமைக்கப்படாமல் உள்ளது.
 மேலும், கழிநீர் செல்லும் வழியை தனியார் ஒருவர் அடைத்து விட்டதால், தற்போது கழிவுநீர் வெளியேற வழியின்றி தெருவிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் மழை பெய்யும் நேரங்களில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து வீடுகளுக்கு வந்து விடுகிறது. இதனால் நாங்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகிறோம்.
 இப்பகுதியில் தரமான சாலை அமைக்கவும், கழிவுநீர் கால்வாய் அமைக்கவும் பல முறை மாவட்ட ஆட்சியருக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மழைக்காலம் தொடங்குவதற்குள் எங்கள் பகுதியில், கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலைகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com