Enable Javscript for better performance
கர்நாடக ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடக ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 18th May 2018 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    congress

    பாஜகவிற்கு ஆதரவாகச் செயல்படும் கர்நாடக ஆளுநரைக் கண்டித்து செங்கல்பட்டில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம். 

    கர்நாடகத்தில் பாஜகவுக்கு சாதகமாக ஆளுநர் வஜுபாய் வாலா செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, அவரைக் கண்டித்து செங்கல்பட்டில் காங்கிரஸ் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
    கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 104 இடங்களை, அதை எதிர்த்துப் போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் 116 இடங்களையும் பிடித்துள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஆட்சியமைக்க 116 எம்எல்ஏக்களின் பெயர்ப் பட்டியலை மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் எச்.டி.குமாரசாமியும், மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் உள்ளிட்டோரும் ஆளுநரிடம் அளித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். எனினும், 104 
    எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள பாஜகவின் தலைவர் எடியூரப்பாவை முதல்வராக பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். எடியூரப்பா வியாழக்கிழமை பதவியேற்றார். இந்நிலையில், பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் சாதகமாக ஆளுநர் நடந்து கொண்டுள்ளதாகக் குற்றம்சாட்டி காங்கிரஸார் செங்கல்பட்டில் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். கட்சியின் மாவட்டத் தலைவர் சுந்தரமூர்த்தி உத்தரவின்பேரில் நகர பொறுப்பாளர் ஜே.பாஸ்கர் தலைமையில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள் டி.ஜெயவேல், பழவேலி காமராஜ், ஆர்.குமரவேல், ஏ.ரியாஸ் பாய், ஆர்.மனோகர், சின்னக்கடை ராஜேந்திரன், ஏ.ஜி.பார்த்தசாரதி, கோட்டி, பவளவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றி கோஷமிட்டனர். 
    மோடியின் அரசியல் தந்திரத்தில் ஆளுநர் விழுந்து விட்டதாகவும், மத்திய அரசு மக்கள் விரோத ஆட்சியை நடத்துவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். 
    மத்திய அரசின் செயல்பாட்டால் நீட் தேர்வு எழுதி பெற்றோரை இழந்து சில மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் காங்கிரஸார் கோஷம் எழுப்பினார். நீட் தேர்வினால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்துக்குக் காரணமான மோடி அரசு பதவி விலக வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் எழுப்பினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai