Enable Javscript for better performance
சுங்கச் சாவடிகளில் ஆம்புலன்ஸ்களுக்கு தனிவழி :ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    சுங்கச் சாவடிகளில் ஆம்புலன்ஸ்களுக்கு தனிவழி :ஆட்சியர்

    By DIN  |   Published on : 18th May 2018 04:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    meet

    மாவட்ட சாலைப் பாதுகாப்புக் குழுவின் கூட்டத்தில் பேசிய ஸ்ரீபெரும்புதூர் எம்.பி.யும், சாலைப் பாதுகாப்புக் குழு தலைவருமான கே.என்.ராமச்சந்திரன். (கீழ்வரிசை) கூட்டத்தில் பங்கேற்றவர்கள். 

    காஞ்சிபுரம் மாவட்ட சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தனிவழி ஏற்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா சாலைப் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் தெரிவித்தார். 
    காஞ்சிபுரம் மாவட்டம், பல்லாவரம் நகராட்சி கூட்டரங்கில் மாவட்ட சாலைப் பாதுகாப்புக் குழுவின் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் எம்.பி.யும், சாலைப் பாதுகாப்புக் குழு தலைவருமான கே.என்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஆட்சியர் பா.பொன்னையா முன்னிலை வகித்தார். 
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகமாக வாகனங்களை பயன்படுத்தும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலை நிறுவனங்கள், தனியார் வாடகை வாகன உரிமையாளர்கள், காவல்துறை, போக்குவரத்து துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட தரப்பினர் இதில் கலந்துகொண்டு, சாலைப் பாதுகாப்பு குறித்தும், விபத்துக்களைத் தவிர்ப்பது குறித்தும் ஆலோசனைகளாயும், கருத்துகளாயும் வழங்கினர். 
    இக்கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய எம்.பி. ராமச்சந்திரன், 'காஞ்சிபுரம் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும். அதோடு, தொடர் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
    அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: 
    சுங்கச் சாவடியில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு, அதனால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. அதனை சரிசெய்ய வேண்டும். அவ்வகையில், ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் கடைசியில் ஒரு தனி வழியை ஏற்படுத்த வேண்டும். அவ்வழி மூலம் ஆம்புலன்ஸ் வாகனங்கள், பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவன வாகனங்கள் செல்ல வழிவகை செய்யப்பட வேண்டும். 
    இதற்காக, ஓட்டுநர்களுக்கு தனி பாஸ் வழங்குவது பற்றி தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் அதிகப்படியான விபத்துக்கள் ஏற்படுகின்றன. இவ்விபத்துகளைத் தவிர்க்க பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுகக்குப்பட்டு வ ருகின்றன. அவற்றை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தலைக்கவசம் அணிவதில்லை. அதோடு, செல்லிடப் பேசியில் பேசியவாறும், மது அருந்திவிட்டும், சாலை விதிகளைப் பின்பற்றாமல் வாகனங்களை ஓட்டுகின்றனர். 
    இதனால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கும் வகையில், அனைவரும் முறையாக தலைக்கவசம் அணிந்து, சாலை விதிகளைப் பின்பற்றி வாகனங்களை ஓட்டச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களில் சிக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தவும், காயமடைந்தோரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மீட்பு வாகனங்களை கூடுதலாக இயக்கவும் தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர். 
    அதைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைகளில் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்வது, அனுமதியின்றி சாலை மையத் தடுப்புகளை உடைத்துக் கொண்டு கடக்கும் வாகனங்களைத் தடுப்பது, மையத் தடுப்புச் சுவரின் உயரத்தை அதிகரிப்பு, கிராமச் சாலைகளில் தேசிய நெடுஞ்சாலையை வந்தடையும் முகப்பில் வேகத்தடை அமைப்பது, தேசிய நெடுஞ்சாலைகளில் வேகமாகச் செல்லும் வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பது, சாலைகளில் தடுப்புகளை தேவையான இடங்களில் அமைப்பது ஆகியவற்றுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 
    மேலும், அதிகவேகமாக செல்லும் வாகனங்களைக் கண்டறிய வேக கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்தி, விதி மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கைப் பலகைகள் இரவில் ஒளிவரும் வண்ணம் எல்.இ.டி பலகைகளை வைக்க வேண்டும்; கார்களில் சீட் பெல்ட் அணியுமாறு அறிவுறுத்தப்பட வேண்டும்; சாலை விபத்து ஏற்பட்டு, ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்கு செல்லும்போது வாகன நெரிசலில் அகப்பட்டு, உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க நடடிவக்கை எடுக்க வேண்டும்; சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விபத்துகள் குறித்து மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது. 
    இக்கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ பழனி, போக்குவரத்து துணை ஆணையர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai