செவிலிமேடு, ஓரிக்கை பகுதிகளில் வருவாய் நிர்வாக ஆணையர் டெங்கு ஆய்வு

செவிலிமேடு, ஓரிக்கை பகுதிகளில் டெங்கு ஆதாரங்களை அழிக்கும் ஆய்வினை வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டார்.

செவிலிமேடு, ஓரிக்கை பகுதிகளில் டெங்கு ஆதாரங்களை அழிக்கும் ஆய்வினை வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டார்.
 காஞ்சிபுரம் நகராட்சிப் பகுதிகளில் தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோர் டெங்கு கொசு உற்பத்திக்கான ஆதாரங்களை அழிப்பதற்கான ஆய்வினை மேற்கொண்டனர். அப்போது, காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு தனியார் சிமெண்ட் நிறுவனம், ஓரிக்கை போக்குவரத்துக் கழக பணிமனை, டாஸ்மாக் கிடங்கு ஆகிய பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து, டெங்கு கொசுக்களின் உற்பத்திக்கு காரணமான பொருள்களில் லார்வா உற்பத்தியாகியுள்ளதா? என சத்தியகோபால் பார்வையிட்டார். அதோடு, கொசுப்புழுக்கள் உற்பத்திக்கு காரணமான தேங்காய் ஓடு, நெகிழி கப்புகள் உள்ளிட்ட பொருள்களை முறையாக அந்தந்த பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தி கொசுக்கள் உற்பத்தியாகாகவாறு பார்த்துக் கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
 அதைத் தொடர்ந்து, புஞ்சை அரசாந்தாங்கல், காலூர், முத்தியால்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு சென்று, புதிய முறைப்படி நடப்பட்டு, வளரும் பழமரக்கன்றுகளை அவர் பார்வையிட்டார். அப்போது, தேக்கு மரங்களும், மயில்கொன்றை மரங்களும் சாதாரண முறைப்படி வளர்க்கும் முறையை விட வேகமாக புதிய முறையில் வளர்வதைக் கண்டு, இதே போன்று மரக்கன்றுகளை நடுவதற்கு மரக்கன்று நடுவோர்களிடம் எடுத்துரைத்தார். அதோடு, மரக்கன்று நடும் நாள் உள்ளிட்ட விவரங்களுடன் பலகை வைத்து மரக்கன்று நட்டு பராமரிக்க அறிவுறுத்தினார்.
 இந்த ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஜெயக்குமார், வருவாய் கோட்ட அலுவலர் ராஜு, சுகாதார துணை இயக்குநர் டாக்டர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் சர்தார், பொறியாளற் மகேந்திரன், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 தாம்பரம் கோட்டத்தில்...
 தாம்பரம் கோட்டப் பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்புப் பணிகளை வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
 காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் கோட்டத்துக்குட்பட்ட ஒரத்தூர் ஏரி ஆரம்ப எல்லையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக, ஒரத்தூர் ஏரி, ஆரம்பாக்கம் ஏரிப் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான இடங்களை ஒருங்கிணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக, முதல்கட்டமாக ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் கரை அமைக்கும் பணி, ஏற்கெனவே இருக்கும் அணைக்கட்டை ரூ.4.5 கோடியில் அமனம்பாக்கம் படப்பை ஏரிக்கு நீர் செல்வதற்கு கால்வாய் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை, வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து, ரூ.70 லட்சத்தில் ஆதனூர் ஏரிக்கு வரத்து கால்வாயிலும், உபரி நீர் அடையாறு ஆற்றுக்கு செல்லும் வகையில் வெள்ள வடிநீர் கதவணைகள் அமைக்கும் பணி, ரூ.8.5 கோடியில் ஆதனூரில் 760 மீ நீளத்துக்கு மூடு கால்வாய் அமைக்கும் பணி, வண்டலூர் - வாலாஜா சாலையில் புதிய பாலம், வெளிவட்டச் சாலை சிறுபாலம், ரூ.20 கோடியில் நடைபெறும் பாப்பான் கால்வாயையொட்டி தர்கா சாலையில் மூடு கால்வாய் அமைக்கும் பணி ஆகியவற்றை வருவாய் நிர்வாக ஆணையர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 ஒரத்தூர் ஏரி, ஆரம்பாக்கம் ஏரியை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைப்பட்டு வருகிறது. இதன்மூலம், 0.3 டிஎம்சி முதல் 0.5 டிஎம்சி நீரை கூடுதலாகச் சேமிக்க முடியும். அதோடு, ஆதனூரில் புதிய வெள்ள வடிநீர்க் கதவணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், கடந்த 2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 17 நகர்ப்பகுதிகளும், வருங்காலத்தில் பாதிக்கப்படாது. மேலும், உபரி நீர் கடலில் வீணாவதும் தடுக்கப்படும்.
 முடிச்சூர் சாலையில் மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் மூடு கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் தாமதமானாலும், வரும் பருவமழைக் காலங்களில் மழைநீர் வடிவதற்கு எவ்வித தடங்கலும் ஏற்படாது. அதோடு, பணிகளும் பாதிப்பு ஏற்படாமல் தொடர்ந்து நடைபெறும் என்றார் அவர்.
 இந்த ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஜெயக்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தியாகராஜன், உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப்பொறியாளர் குகராஜ் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com