கருகும் நெற்பயிர்கள்: காப்பீட்டுத் தொகையை எதிர்பார்க்கும் விவசாயிகள்

சுங்குவார்சத்திரத்தை அடுத்த மதுரமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் போதிய தண்ணீர் இன்றி
சிங்கிலிப்பாடி  பகுதியில்  தண்ணீரின்றிக்  கருகும்  நெற்பயிர்கள்.
சிங்கிலிப்பாடி  பகுதியில்  தண்ணீரின்றிக்  கருகும்  நெற்பயிர்கள்.


சுங்குவார்சத்திரத்தை அடுத்த மதுரமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் போதிய தண்ணீர் இன்றி கருகி வருகின்றன. இதனால் தங்களது வாழ்வாதாரத்தைக் காக்க இப்பகுதி விவசாயிகள் காப்பீட்டுத் தொகையை எதிர்பார்த்து வருகின்றனர். 
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள மதுரமங்கலம் சிங்கிலிப்பாடி, எடையார்பாக்கம், மேல்மதுரமங்கலம், கண்ணந்தாங்கல், மேலேரி, எட்டிக்குட்டிமேடு, ராமானுஜபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தற்போது என்.எல்.ஆர் மற்றும் பாபட்லா ஒட்டு நெற்பயிற்களை பயிரிட்டுள்ளனர். 
இந்நிலையில், பருவ மழை பெய்யாததால் மேற்கண்ட பகுதிகளில் உள்ள பொதுப்பணித் துறை மற்றும் ஒன்றியக் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் அனைத்தும் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால், ஏரி நீரைப் பயன்படுத்தி விவசாயம் நடைபெற்று வரும் மதுரமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள இப்பகுதி விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் குறித்து வேதனையடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: 
எங்கள் பகுதிகளில் ஏரிப்பாசனத்தை பெரிதும் நம்பியே நிலங்கள் உள்ளன. இப்பகுதி வானம் பார்த்த பூமியாக உள்ளது. இதனால் ஏரி நீர் மற்றும் மழையை நம்பியே விவசாயம் செய்து வருகிறோம். தற்போது மதுரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்துள்ளோம். ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், நெற்பயிர் பயிரிடப்பட்டு சுமார் 70 நாள்களான நிலையில், கதிர் வரும் வேளையில், பயிர்களுக்குத் தேவையான தண்ணீர் ஏரிகளில் இல்லாததாலும், மழை பெய்யாததாலும் தற்போது நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன. 
கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் ஏரிகளுக்கு வரும் நீர்வரத்துக் கால்வாய்கள் சீரமைக்கப்படவில்லை. இதனால் ஏரிகளில் போதுமான நீரைத் தேக்கிவைக்க முடியாமல் போனது. தற்போது ஏரிகள் அனைத்தும் வறண்டு போய் உள்ளன. இதனால் ஏரிகளையும் நீர்வரத்துக் கால்வாய்களையும் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கருகிய நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்துள்ளோம். அந்தக் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com