மாமல்லபுரம் சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர்

மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த வாரத்தில் அவ்வப்போது பெய்த மழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கியிருப்பதால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மாமல்லபுரம் ஐந்துரதம் செல்லும் பாதையில் தேங்கியிருக்கும் மழை நீரில் ஊர்ந்து வரும் ஆட்டோ.
மாமல்லபுரம் ஐந்துரதம் செல்லும் பாதையில் தேங்கியிருக்கும் மழை நீரில் ஊர்ந்து வரும் ஆட்டோ.


மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த வாரத்தில் அவ்வப்போது பெய்த மழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கியிருப்பதால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா மையமாக விளங்கும் மாமல்லபுரம் பேரூராட்சி சிறப்பு நிலை பேரூராட்சியாக உள்ளது. யுனெஸ்கோ அமைப்பால் சர்வதேச சுற்றுலா நகரமாக மாமல்லபுரம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, இங்குள்ள பல்லவர் காலச் சிற்பங்களை மத்திய தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. 
இந்நிலையில், கடந்த 2 வார காலமாக இப்பகுதியில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. எனினும் மழைநீர் வெளியேற நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படாததால் மாமல்லபுரத்தில் முக்கிய சாலைகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கியுள்ளது. வேகமாகச் செல்லும் வாகனங்கள் வாரி இறைத்துச் செல்லும் சேற்றுநீருக்கு பயந்து பாதசாரிகள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். சாலைகளில் தேங்கியுள்ள நீரால் வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் ஏற்படுகிறது.
நகர பேருந்து நிலையம், அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே குளம்போல் மழைநீர் தேங்கியிருக்கிறது. குறுகிய சாலைகளாக இருப்பதாலும், மழைநீர் வெளியேற வடிகால்வாய்கள் இல்லாததாலும் பாதசாரிகள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். அதேபோல், உள்ளூர் மற்றும் வெளிநாட்டுசுற்றுலாப் பயணிகள் சுற்றுலாப்பகுதிகளுக்குச் சென்று பார்க்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
எனவே, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு சாலையில் தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றுவதற்கும், இனிவரும் பருவமழைக் காலத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க வடிநீர் கால்வாய்களை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com