ரஃபேல் போர் விமான ஊழல் புகார்: முன்னாள் எம்.பி. தலைமையில் காங்கிரஸார் கண்டனப் பேரணி

ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டி, காஞ்சிபுரத்தில் முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர்
மத்திய அரசுக்கெதிரான கண்டனப் பேரணியில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்டோர்.
மத்திய அரசுக்கெதிரான கண்டனப் பேரணியில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்டோர்.


ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டி, காஞ்சிபுரத்தில் முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை கண்டனப் பேரணி நடத்தினர்.
மத்திய அரசின் ரஃபேல் போர் விமான ஊழலைக் கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே கண்டனப் பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் தலைமை வகித்தார். தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் தாமோதரன் ஒருங்கிணைத்தார். காஞ்சிபுரம் மேற்கு, தெற்கு, வடக்கு மாவட்டத் தலைவர்கள் மதியழகன், சுந்தரமூர்த்தி, ரூபி மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியை ரங்கசாமி குளம் முன்பு தொடங்கி விளக்கடி கோயில் தெரு, கீரை மண்டபம் வழியாக காவலான் கேட் பகுதி வரை நடத்தினர். அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பின்பு, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுயிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, காங்கிரஸாரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு, மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் சென்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். இந்தப் பேரணியில், ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஊழலைக் கண்டிப்பதாகவும், பாஜக அரசுக்கு எதிராகவும், மத்திய அரசு பதவி விலகக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர்.
கோரிக்கை மனுவை அளித்த பின்பு, முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறியது:
காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் பாதுகாப்புக்கென நூறுக்கும் மேற்பட்ட ரஃபேல் போர் விமானங்களை வாங்க வேண்டும் என விமானப்படை கோரிக்கை வைத்தது. அதன்படி, காங்கிரஸ் ஆட்சியில் விமானம் ஒன்றுக்கு ரூ.526 கோடிக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின் பாஜக ஆட்சி ஏற்பட்டது. தற்போது, ரஃபேல் ரக போர் விமானங்கள் ரூ.1,670 கோடி என மூன்று மடங்கு விலைக்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 
கத்தார் உள்ளிட்ட நாடுகளில் இந்த ரக விமானங்கள் குறைந்த விலையில் வாங்கப்பட்டுள்ளன. சுமார் 36 ரஃபேல் போர் விமானங்களுக்கு மட்டும் மக்களின் வரிப்பணம் சுமார் ரூ.41 ஆயிரம் கோடிக்கும் மேல் கூடுதலாக கொடுக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ராணுவ தளவாடக் கொள்முதலில் நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளதால், இது தொடர்பான விவரங்களை பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. 
அதோடு, இவ்விவகாரத்தில் பாஜக அரசு ஏமாற்றி வருகிறது. மேலும், சுமார் 75 ஆண்டுகள் பொதுத்துறை நிறுவனத்தை நீக்கி விட்டு, வெறும் 13 நாள்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட விமான உற்பத்தியில் அனுபவம் இல்லாத அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையெனில், நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com