திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியை இழப்பர்: எடப்பாடி கே.பழனிசாமி

திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியை இழப்பர் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியை இழப்பர்: எடப்பாடி கே.பழனிசாமி

திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியை இழப்பர் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
 அண்ணாவின் 110ஆவது பிறந்த நாளையொட்டி அதிமுக மேற்கு மாவட்டம் சார்பில் காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:
 அண்ணா பிறந்த மண்ணில் தமிழக முதல்வராகப் பேசுவதில் பெருமைப்படுகிறேன். பெரியாருடன் இணைந்து மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளைப் பரப்புவதில் முன்னின்று செயல்பட்டவர் அண்ணா. ஹிந்தி எதிர்ப்பு, கடமை கண்ணியம் கட்டுப்பாடு எனும் கொள்கையில் வாழ்ந்து காட்டியவர். காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியவர் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தக்காரர் அண்ணா.
 அவர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த 50ஆம் ஆண்டை பொன்விழா ஆண்டாக கொண்டாடி வருகிறது. அவரது வழியில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கொள்கை மாறாமல் அதிமுகவை வழிநடத்தி வந்துள்ளனர். அவ்வழியிலேயே தற்போது அதிமுக அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் அனைவரும் தமிழகத்துக்கு என்ன செய்தனர் என்று கேட்கின்றனர். அதற்கு அதிமுக அரசு உரிய பதிலை அளித்து வருகிறது.
 மேலும், எதிர்க்கட்சிகள் அனைத்தும் பொய்யான செய்தியைப் பரப்பி வருகின்றன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் நெருங்கி விட்டது. 50 ஆண்டு காலம் தீராத பிரச்னையான காவிரி பிரச்னையை அதிமுக தீர்த்து வைத்தது. மத்திய, மாநில ஆட்சிகளில் பங்கெடுத்த திமுக இதுவரை என்ன செய்தது? மகன், மகள், பேரன் என குடும்பத்தினருக்கு பதவி வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டவர்தான் கருணாநிதி. காவிரி விவகாரத்தில் சுமுக தீர்வைக் காண்பதை விடுத்து, அவர்கள் துரோகம் செய்தனர். இதனால், காவிரியில் 192 டிஎம்சியில் இருந்து 177 டிஎம்சி நீராக நமது பங்கு குறைந்தது.
 காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு என எந்தப் பிரச்னையையும் திமுக-வினர் தீர்த்து வைக்கவில்லை. கருணாநிதி, ஸ்டாலின் என்று அடுத்தடுத்து குடும்பத்தினரே திமுக-வில் பதவி வகித்து வருகின்றனர். திமுகவினருக்கு அதிகார போதை அதிகம்.
 காவிரி நதிநீர் பிரச்னைக்காக 23 நாள்களுக்கு நாடாளுமன்றத்தை செயல்படாமல் முடக்கிய பெருமை அதிமுக-வுக்கு உண்டு. தொண்டர்களால் ஆளக்கூடிய அரசு தமிழக அரசு. தொண்டர்களை முதல்வராகப் பார்க்கும் இயக்கம் இது. உழைப்புக்கும், வெற்றிக்கும் தொண்டர்களே காரணம். அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க எவராலும் முடியாது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-வின் முழுத் திறனையும் பயன்படுத்தி வெற்றி பெறும்.
 சட்டம்-ஒழுங்கை பேணிக் காப்பது, பெண்களின் பாதுகாப்பு என தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும்போதே திமுக இத்தனை அராஜகம் செய்கிறது. இதுவே, ஆளும் கட்சியாக திமுக இருந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது.
 அதிமுக ஆட்சி விரைவில் கவிழும் என்பது பொய்ப் பிரசாரம். ஆட்சி அமைந்து இதுவரை ஓராண்டு, 7 மாதங்கள் ஆகிவிட்டது. நேர்மையான அரசு இது.
 தமிழகத்தில் அதிக அளவில் போராட்டங்களைத் தூண்டி விடுவது எதிர்க்கட்சிகளே. இதனை மக்கள் சரியாக புரிந்து கொண்டுள்ளனர். "முதல்வர் நெடுஞ்சாலைத் துறையில் ஊழல் செய்தார்' என்ற குற்றச்சாட்டு தவறானது. திமுக ஆட்சியில் ஒருவர் மட்டுமே ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ள விண்ணப்பிப்பார். இதன்மூலம், கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர்கள் திமுகவினர். எனது உறவினருக்கு நான் ஒப்பந்தப் பணிகளைத் தந்துள்ளேன் என்பது தவறு.
 இ-டெண்டர் எனப்படுவது உலகத்தில் எங்கிருந்தாலும் டெண்டர் எடுக்கலாம். இதில், தனிநபருக்கு என்று தர முடியாது. எனது உறவினருக்கு விருப்பப்பட்டு டெண்டர் தந்தேன் என்பது முற்றிலும் தவறானது. இதற்கு எதிர்க்கட்சிகள் பதில் சொல்ல வேண்டும். திமுக என்ன நடைமுறையில் டெண்டர் விட்டதோ அதே முறையில் அதிமுக அரசும் செய்கிறது. எந்தவித முறைகேடும் கிடையாது.
 ஸ்டாலின் அடுத்தவர் எழுதித் தருவதை படிப்பவர். கோப்புகளைப் படித்து கையெழுத்து போடமாட்டார். அதனாலேயே தனிநபர் டெண்டர் அதிகம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதிமுக அரசில் இதுவரை எந்தக் கோப்பும் நிலுவையில் இல்லை. நான் கடந்த 1974 ஆம் ஆண்டில் கிளைச் செயலராக கட்சிப்பணியில் இருந்து பல்வேறு பதவிகளை வகித்து முதல்வராக எனது உழைப்பால் உயர்ந்துள்ளேன். அதிமுகவே எனது உயிர்மூச்சு. என்னைப் போன்ற தொண்டர்களும் அதிமுக-வில் முதல்வராகலாம்.
 டி.டி.வி.தினகரன் வனவாசம் சென்றது போல் 10 ஆண்டுகள் எங்கிருந்தார் என்பதே தெரியவில்லை. அவரது குடும்பத்தால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரது குடும்பத்தில் ஒருவர் கட்சி தொடங்கியுள்ளார். ஜெயலலிதாவால் விரட்டி அடிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பேசுவதற்கு தகுதியில்லை. இடைத்தேர்தலில் தில்லுமுல்லு செய்து தினகரன் வெற்றி பெற்றார்.
 எத்தனை தினகரன்கள் வந்தாலும் அதிமுக-வை ஒன்றும் செய்ய முடியாது. அவரை அதிமுக ஒருபோதும் மன்னிக்காது. எத்தனை பேர் எதிர்த்து வந்தாலும் அதிமுக அரசை ஒன்றும் செய்ய முடியாது. எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் எடப்பாடி பழனிசாமி.
 இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் உதயகுமார், பெஞ்சமின், காஞ்சிபுரம் எம்.பி. மரகதம் குமரவேல், அதிமுக கொள்கை பரப்புச் செயலர் வைகைச்செல்வன், காஞ்சி மேற்கு மாவட்டச் செயலர் வாலாஜாபாத் கணேசன், அதிமுக அமைப்புச் செயலர்கள் சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, எம்எல்ஏ பழனி, மாவட்ட, நகர, ஒன்றிய அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com