மாமல்லபுரம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பு

பிள்ளையார் சதுர்த்தி விழா முடிந்ததைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தெருக்களில் வைத்து பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடற்கரையில் கடந்த இரண்டு நாள்களாக கரைக்கப்பட்டன.

பிள்ளையார் சதுர்த்தி விழா முடிந்ததைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தெருக்களில் வைத்து பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடற்கரையில் கடந்த இரண்டு நாள்களாக கரைக்கப்பட்டன.
 விநாயகர் சதுர்த்தியையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருப்போரூர், மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளான ஓட்டேரி, சிறுதாவூர், கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோவில், திருக்கழுக்குன்றம், திம்மாவரம் உள்ளிட்டவற்றில் வைத்து பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் முதல் கட்டமாக மாமல்லபுரம் கடற்கரையில் சனிக்கிழமை கரைக்கப்பட்டன.
 இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கட்டமாக 6, 8 மற்றும் 15 அடி உயரம் கொண்ட சிலைகள் இந்து முன்னணி, மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்ட சிலைகளை மேளதாள தாளம் முழங்க, வெடி மற்றும் ஆட்டம், கொண்டாட்டத்துடன் ஊர்வலமாக கொண்டுவந்தனர். போலீஸார் பக்தர்கள் யாரையும் கடலில் இறங்க அனுமதிக்கவில்லை.
 மாமல்லபுரம் கடற்கரைப் பகுதியில் தற்காலிக டிராலி அமைத்து, சிலைகளை ஒன்றன்பின் ஒன்றாக வாங்கி போலீஸாரே அவற்றைக் கரைத்தனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
 மாமல்லபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுப்புராஜ் தலைமையில் ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் பக்தர்கள் கடலில் இறங்கிக் குளிக்கவும் போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. ஒரு சிலர் குடிபோதையில் வருவதால் கடலில் இறங்கி கரைக்கும்போது உயிரிழப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் நோக்கில், கடலில் இறங்குவதற்கு அனைவரையும் அனுமதிக்காதது வேதனையளிப்பதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர். விநாயகர் சிலைகளைக் கரைத்த பிறகு கடலில் இறங்கிக் குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் தங்களுக்கு அவ்வாறு குளிக்க அனுமதி வழங்காதது வேதனையளிப்பதாக அவர்கள் கூறினர்.
 இந்து முன்னணி சார்பில்...
 செங்கல்பட்டில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 பிள்ளையார் சதுர்த்தி விழாவையொட்டி, செங்கல்பட்டில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து விநாயகர் விசர்ஜன (கரைப்பு) விழாவையொட்டி அச்சிலைகள், நகரின் பழைய பேருந்து நிலையம் அருகில் கொண்டு வரப்பட்டன. அதேபோல், மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், சிங்கப்பெருமாள் கோவில், ஆத்தூர், திம்மாவரம், பாலூர் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளும் பழைய பேருந்து நிலையம் அருகில் கொண்டுவரப்பட்டு ஊர்வலமாக மாமல்லபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
 இந்த ஊர்வத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாநிலச் செயலாளர் இராம.ராஜசேகர் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இந்து முன்னணி காஞ்சி தெற்கு மாவட்டத் தலைவர் பி.கே.அன்னைராஜ், நகர நிர்வாகிகள் பிரகலாதன், நரேன், சந்தோஷ், காட்டாங்கொளத்து ஒன்றிய அமைப்பாளர் ராஜா மற்றும் அன்னையர் முன்னணியின் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் ஊர்வலம் நடைபெற்றது.
 காவல்துறை டிஎஸ்பி கந்தன், ஆய்வாளர்கள் செüந்தரராஜன், சக்திவேல், ரமேஷ், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீஸார் செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் மேம்பாலம் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, விநாயகர் சிலை ஊர்வலத்தை அனுப்பி வைத்தனர். சிலைகளின் ஊர்வலம் வாண வேடிக்கை, ஆரவாரத்துடன் நடைபெற்றது.
 மாமல்லபுரம் தவிர, சதுரங்கப்பட்டினம், கல்பாக்கம், கோவளம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
 இந்து மக்கள் கட்சி சார்பில்...
 புலிப்பாக்கம் பகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 அக்கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, நரேந்திர மோடி அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டுப் பேசினார். அதைத் தொடர்ந்து, விநாயகர் சிலை ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பாரத மாதா செந்தில் மாவட்டத் தலைவர் அனகை ஆனந்தன், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் சண்முகம், நகர தலைவர் லட்சுமிரதன், ஊரக மாவட்ட பொதுச் செயலாளர் ரமேஷ் கிருஷ்ணா, பாலயோகி வடபாதி சித்தர் சுவாமிகள் ஏராளமான இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு ஊர்வலத்தை நடத்தினர்.
 முன்னதாக, விநாயகர் சதுர்த்தியையொட்டி இப்பகுதியில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. செங்கல்பட்டு கணபதி தியேட்டர் முருகேசனார் தெரு, ஹைரோடு, மக்கான் சந்து தெரு உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைக்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
 இந்த ஊர்வலத்தில் இந்து மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராஜேஷ், சரவணன், தென்னரசு, தேவா, பிரகாஷ் மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 மதுராந்தகத்தில்....
 மதுராந்தகம், செப். 16: மதுராந்தகம் வட்டாரத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட 137 பல வண்ண விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கிழக்கு கடற்கரைச் சாலையையொட்டி உள்ள கடலூர் கிராமம், இடைக்கழிநாடு ஆகிய பகுதிகளில் வங்கக் கடலில் கரைக்கப்பட்டன.
 மதுராந்தகம் வட்டாரத்தில் உள்ள மதுராந்தகம், கருங்குழி, அச்சிறுப்பாக்கம், ஒரத்தி, சித்தாமூர் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல வண்ணம் தீட்டப்பட்ட, 10 அடி உயரத்துக்கு உட்பட்ட விநாயகர் சிலைகள் குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டு பக்தர்களால் வணங்கப்பட்டன.
 மதுராந்தகம் பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 30 சிலைகளும், அச்சிறுப்பாக்கம் பகுதியில் 42 சிலைகளும், ஒரத்தி பகுதியில் 42 சிலைகளும், மேல்மருவத்தூர் பகுதியில் இருந்து 23 சிலைகளும் வேனில் ஏற்றப்பட்டன. அவற்றை, மேளதாளம் மற்றும் பேண்டு வாத்தியக் குழுவின் இசையுடன் செய்யூர் வட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையையொட்டி அமைந்துள்ள கடலூர் கிராமம், இடைக்கழிநாடு ஆகிய இடங்களில் விழாக் குழுவினரும், 2 பக்தர்களும் சேர்ந்து வங்கக் கடலில் கரைத்தனர்.
 இந்த நிகழ்ச்சியில் சூனாம்பேடு காவல் ஆய்வாளர் வெங்கடேசன், கூவத்தூர் காவல் உதவி ஆய்வாளர் மோகன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com