தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்த 272 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி தொழிலாளர் நல துணை ஆணையர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில், மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை இயங்கி வந்தது. இத்தொழிற்சாலையில் 272 ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், இத்தொழிற்சாலை கடந்த டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி முதல் மூடப்பட்டது.
இந்த நிலையில், தொழிற்சாலையில் பணிபுரிந்த நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கியதுபோல், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.பி.சி.தனசேகரன் தலைமையில் தொழிலாளர் நல துணை ஆணையர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.