சாலவாக்கம் திரௌபதி அம்மன் கோயில் உள்ளிட்ட 5 கோயில்களின் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
உத்தரமேரூர் வட்டம், சாலவாக்கம் கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் புதன்கிழமை இரவு பூஜை முடித்த பின்பு, கோயிலை பூட்டி விட்டுச் சென்றனர். வழக்கம் போல் வியாழக்கிழமை காலை கோயிலுக்குச் சென்று பார்த்த போது, பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து, உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல்களும் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை பணம் திருடு போனது தெரியவந்தது. அதேபோல், திரெளபதி அம்மன் ஆலயம் அருகே உள்ள ஸ்ரீ விநாயகர் கோயில், திருமுக்கூடல் பகுதியிலுள்ள தான்தோன்றி அம்மன் கோயில், சித்தி விநாயகர் கோயில், வரசித்தி விநாயகர் கோயில் ஆகிய 5 கோயில்களின் பூட்டுகளும் அடுத்தடுத்து உடைக்கப்பட்டு திருடு போனது தெரியவந்துள்ளது. சாலவாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.