தேர்தல் நடத்தை விதிமுறை: 58 ஆயிரம் சுவர் விளம்பரங்கள் அழிப்பு
By DIN | Published On : 14th April 2019 01:10 AM | Last Updated : 14th April 2019 01:10 AM | அ+அ அ- |

தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி இதுவரை 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த மார்ச் 10-ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றன. அதன்படி, பறக்கும் படையினர், நிலைக் கண்காணிப்பு குழுவினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, அரசு மற்றும் தனியார் கட்டடங்களின் சுவர்களில் எழுதப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
அனுமதியின்றி சுவர் விளம்பரம் செய்யக் கூடாது என்ற விதியை மீறிய வகையில், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் அரசுக்குச் சொந்தமான கட்டடங்களில் எழுதப்பட்ட 16 ஆயிரத்து 742 விளம்பரங்களும், தனியார் கட்டடங்களில் எழுதப்பட்ட 20 ஆயிரத்து 93 விளம்பரங்களும் அழிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் அரசுக்குச் சொந்தமான கட்டடங்களில் எழுதப்பட்ட 6 ஆயிரத்து 60 விளம்பரங்களும், தனியார் கட்டடங்களில் எழுதப்பட்ட 15 ஆயிரத்து 714 விளம்பரங்களும் அழிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மொத்தம் 58 ஆயிரத்து 609 விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அழிக்கப்பட்ட அனைத்துக் கட்சி விளம்பரங்களுக்கான செலவு, அந்தந்த வேட்பாளர்களின் தேர்தல் செலவினக் கணக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளது.
98 வழக்குகள்: இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தனியார் கட்டடங்களில் பேனர்கள் வைத்தது தொடர்பான புகார், விளம்பரங்கள் எழுதியது தொடர்பான புகார், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வந்த புகார்களின் பேரில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, காஞ்சிபுரத்தில் 5, உத்தரமேரூரில் 2, மதுராந்தகத்தில் 13, திருப்போரூரில் 5, செங்கல்பட்டில் 3 என காஞ்சிபுரம் தொகுதியில் 28 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதேபோல், ஸ்ரீபெரும்புதூரில் 1, மதுரவாயலில் 2, அம்பத்தூரில் 21, ஆலந்தூரில் 26, பல்லாவரத்தில் 7, தாம்பரத்தில் 13 என ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 70 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இரண்டு தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 98 வழக்குகள் இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.