சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தல் பணிகள்: தயார் நிலையில் 20,500 வாக்குச் சாவடி அலுவலர்கள்

  By DIN  |   Published on : 17th April 2019 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவைத் தேர்தல் நாளன்று பணிபுரிய 20,500 வாக்குச்சாவடி அலுவலர்கள் தயார்நிலையில் உள்ளனர் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
   இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
   காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4,122 வாக்குச்சாவடிகள் உள்ளன. அவற்றில் பதற்றமானவை 236. பதற்றமானவை உள்பட 1,357 வாக்குச்சாவடிகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு தொடர்பான நிகழ்வுகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கட்டுப்பாட்டு அறையில் பதிவு செய்து, கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாதிரி வாக்குச்சாவடிகள் தொகுதிக்கு 4 என்ற வகையில் மொத்தம் 11 தொகுதிகளில் 44 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
   பெண் வாக்குச்சாவடி அலுவலர்கள் மட்டுமே பணிபுரியும் வகையில் 22 வாக்குச்சாவடிகள் செயல்படவுள்ளன.
   உத்தரமேரூரில் தொகுதியில் 289-ஆவது வாக்குச்சாவடி மையமான எடையம்புதூரிலும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 271-ஆவது வாக்குச்சாவடி மையமான குண்டுபெரும்பேட்டிலும் மாற்றுத் திறனாளி வாக்குச்சாவடி அலுவலர்கள் மட்டுமே பணிபுரியவுள்ளனர்.
   வாக்குச்சாவடி மண்டல அலுவலர்கள் கொண்ட 239 குழுவினர் பயன்படுத்தும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, அதன் இயக்கங்கள் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படவுள்ளன. அதேபோல், வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரம், வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரம் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் புதன்கிழமை மதியத்துக்குள் மண்டல அலுவலர்களுடன் வாக்குச்சாவடி மையத்தை சென்றடையும்.
   மொத்தம் உள்ள 4,122 வாக்குச்சாவடிகளுக்கும் தலா 4 பேர் என வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவர். இடைத் தேர்தல் நடைபெறவுள்ள திருப்போரூரில் மட்டும் கூடுதலாக 2 வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 6 பேர் பணிபுரியவுள்ளனர். அதன்படி, அனைத்துத் தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் மொத்தம் 17,102 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் நாளன்று பணிபுரியவுள்ளனர். மேலும், 3,298 வாக்குச்சாவடி அலுவலர்கள் மாற்றாக வைக்கப்பட்டுள்ளனர்.
   தேர்தல் நாளன்று கிராமப் பகுதிகளில் மட்டும் 3,600 காவலர்கள் பணிபுரியவுள்ளனர். மதுரவாயல், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய மாநகர பகுதிகளில் 4 ஆயிரம் காவலர்கள் என மொத்தம் 7,600 போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில், கிராமியப் பகுதிகளில் மட்டும் 1,032 பேர் காவலர்கள் அல்லாதோர், ஊர்க்காவல் படையினர், நாட்டு நலப் பணித் திட்ட தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர்.
   வாக்குப்பதிவு இயந்திரங்கள் 15-20 சதவீதம் மாற்றாக வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக மாற்று வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த முடியும். வாக்குச்சாவடிகளுக்கு மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் செல்லும் விதமாக மொத்தம் 578 வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. அத்துடன், கூடுதலாக 10 சதவீத வாகனங்களும் மாற்றாக வைக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை நண்பகல் முதல் வாக்குச்சாவடி அலுவலர்கள், மண்டல அலுவலர்களும், வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்குச்சாவடி அலுவலகத்தைச் சென்றடைவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
   கட்சியினருக்கு கெடுபிடி: வெளி மாவட்டக் கட்சியினர் அவரவர் ஊர்களுக்கு செவ்வாய்க்கிழமையன்றே வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு செல்லாதவர்கள் மீது தேர்தல் சட்டத்தின் 133-ஆவது பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், திருமண மண்டபம், தங்கும் விடுதிகளில் வெளியூர் ஆட்கள் அதிக அளவில் தங்கியிருந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டாலோ, வேறு ஏதேனும் பிரசாரம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான சோதனையை போலீஸார் மேற்கொண்டுள்ளனர் என்றார் ஆட்சியர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai