மக்களவைத் தேர்தல்: கட்சிகளின் தீவிர பிரசாரம் ஓய்ந்தது

மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் தீவிர பிரசாரம் செவ்வாய்க்கிழமையுடன் ஓய்ந்தது.

மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் தீவிர பிரசாரம் செவ்வாய்க்கிழமையுடன் ஓய்ந்தது.
 காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிகளிலும், பேரவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ள திருப்போரூரிலும் கடந்த மார்ச் 19-ஆம் தேதியிலிருந்து பிரசாரம் சூடு பிடித்தது. இதையடுத்து, காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், திமுக வேட்பாளர் ஜி.செல்வம், அமமுக வேட்பாளர் முனுசாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சிவரஞ்சனி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சேகர், சுயேச்சை வேட்பாளர்கள் காஞ்சிபுரம், உத்தரமேரூர், திருப்போரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர் பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
 அத்துடன், தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு பறக்கும் படையினரும், நிலை கண்காணிப்புக் குழுவினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சித் தலைவர்கள் நேரில் வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
 இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரத்தை நிறைவு செய்ய வேண்டியிருந்ததால், காலை முதலே அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சியினர் காஞ்சிபுரம், உத்தரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதிமுக மேற்கு மாவட்டச் செயலர் வாலாஜாபாத் கணேசன் தலைமையில் மக்களவைத் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேல், அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் மாவட்ட, வட்ட, ஒன்றிய நிர்வாகிகள் திரளானோர் பேரணியாக வீதிவீதியாகச் சென்று பிரசாரம் செய்தனர்.
 அதேபோல், உத்தரமேரூரில் திமுக தெற்கு மாவட்டச் செயலர் க.சுந்தர் தலைமையில் திரளான திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பேரணியாகச் சென்று பிரசாரம் செய்தனர்.
 காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் அமமுக வேட்பாளர் முனுசாமி, அக்கட்சி நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். ஒரே நாளில் நகர்ப்பகுதிகளில் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com