மகனை அடித்துக் கொலை செய்த தந்தை உள்பட 4 பேர் கைது
By DIN | Published On : 23rd April 2019 03:09 AM | Last Updated : 23rd April 2019 03:09 AM | அ+அ அ- |

மகனைக் கொன்ற தந்தை உள்பட 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த அய்யம்பேட்டை கந்தப்பர் தெருவைச் சேர்ந்தவர் மணி (62). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். மூன்று மகன்களும் பட்டதாரிகள்.
இதில், இரண்டு மகன்கள் உள்ளூரில் வேலை செய்கின்றனர்.
மகேஷ் (28) என்ற மகன் மட்டும் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவர் அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வார். இந்நிலையில், இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரிலிருந்து அய்யம்பேட்டைக்கு வந்தார்.
அப்போது, மகேஷ் மது அருந்திவிட்டு தந்தை மணியுடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மணி, மூத்த மகன் மோகனவேல்(33), இளைய மகன் ரமேஷ்(25) ஆகியோர் சேர்ந்து மகேஷை பலமாக தாக்கிக் கொன்றனர்.
இதைத் தொடர்ந்து, மகேஷின் சடலத்தை தூக்கில் தொங்கவிட்டனர். பின்னர் மகேஷ் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி உள்ளனர். இதற்கு மணியின் மனைவி தமிழ்ச்செல்வியும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இறுதிச் சடங்கின்போது, மகேஷின் தலையில் காயம் இருந்ததைக் கண்ட அப்பகுதியினர் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த டிஎஸ்பி பாலசுப்பிரமணியன், வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில், மணி, தமிழ்ச்செல்வி, மோகனவேல், ரமேஷ் ஆகிய நால்வரும் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளனர். அப்போது, 4 பேரும் சேர்ந்து மகேஷை தாக்கிக் கொன்று விட்டு தூக்கில் மாட்டிய விவரத்தை போலீஸார் கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து, 4 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.