முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
ரூ.35 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 04th August 2019 01:25 AM | Last Updated : 04th August 2019 01:25 AM | அ+அ அ- |

கர்நாடகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.35 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் இருந்து கண்டெய்னர் லாரி மூலம் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை கடத்தி வந்து, சென்னையின் பல பகுதிகளில் விற்பனை செய்வதாக ஸ்ரீபெரும்புதூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் விநாயகம், நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் சாகுல்அமீது தலைமையிலான போலீஸார் சனிக்கிழமை அதிகாலை மாம்பாக்கம் பகுதியில் ஆய்வு நடத்தினர்.
அப்போது, குட்கா பொருள்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரிகளில் இருந்து ரூ.35 லட்சம் மதிப்புள்ள 2,209 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கண்டெய்னர் ஓட்டுநர்கள் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (29), தர்மலிங்கம் (32), திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் (32), விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தபாபு (27) ஆகியோரை போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.